இந்தியா

மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசில் நீறுபூத்த நெருப்பாக "அதிருப்தி'

மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசில் நீறுபூத்த நெருப்பாகத் தெரியும் "அதிருப்தி', ஆட்சியை தக்க வைக்குமா? தகர்க்குமா? என்ற கேள்வி கர்நாடக மக்களிடையே எழுந்துள்ளது.

ந.முத்துமணி

மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசில் நீறுபூத்த நெருப்பாகத் தெரியும் "அதிருப்தி', ஆட்சியை தக்க வைக்குமா? தகர்க்குமா? என்ற கேள்வி கர்நாடக மக்களிடையே எழுந்துள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் மக்கள் அறுதிப்பெரும்பான்மை தராததன் விளைவாக, மஜத ஆட்சி அமைக்க காங்கிரஸ் "நிபந்தனையற்ற' ஆதரவை தாமாக முன் வந்து அறிவித்தது. இதையடுத்து, முதல்வராக குமாரசாமி, துணை முதல்வராக ஜி.பரமேஸ்வர் தலைமையில் மஜத- காங்கிரஸ் கூட்டணி அமைந்தது.
இதில் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கு உடன்பாடு இல்லை என்றாலும், பாஜகவை ஆட்சி அமைக்காமல் தடுக்கும்பொருட்டு தவிர்க்கமுடியாமல் மஜதவுக்கு ஆதரவு அளிக்க வேண்டிய சூழ்நிலையை ராகுல் காந்தி விளக்கியதும், கட்சிக் கட்டுப்பாட்டுக்கு கட்டுப்பட்டு அதற்கு சம்மதம் தெரிவித்தனர். 
முதல் கோணல்: முதல்வராக குமாரசாமி, துணை முதல்வராக ஜி.பரமேஸ்வர் பதவியேற்றுக் கொண்டதும், துறைகளைப் பகிர்ந்துகொள்வதில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு அரும்பியது. நிதி, பொதுப்பணி, மின்சாரத் துறைகளை காங்கிரஸýக்கு விட்டுத் தர கடைசி வரை மஜத ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் அமைச்சரவை அமைப்பதில் இழுப்பறி நிலவியது.
கூட்டணி ஆட்சியின் அவசியத்தை உணர்ந்த காங்கிரஸ், அத் துறைகளை மஜதவுக்கு தவிர்க்க முடியாமல் விட்டுத் தந்தது. அடுத்ததாக, பயிர்க் கடன் தள்ளுபடி செய்வதில் காங்கிரஸ் உடன்படாதது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முதல்வர் குமாரசாமியே முற்பட்டிருந்தார். பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய பணம் எங்கிருந்து கொண்டுவருவீர்கள் என்று காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா கேட்ட கேள்வி, முதல்வர் குமாரசாமிக்கு ஆத்திரமூட்டியது. முந்தைய காங்கிரஸ் அரசு 2018-19-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ஏற்கெனவே தாக்கல் செய்துள்ளதால், புதிதாக முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வது அவசியமற்றது; மாறாக, புதிய திட்டங்களை அறிவிக்க துணைநிலை பட்ஜெட்டை தாக்கல் செய்யலாம் என்று சித்தராமையா கூறியிருந்த கருத்து மஜதவை நிலைகுலைய வைத்தது.
மஜத-காங்கிரஸ் கூட்டணி முறியும் அளவுக்கு இப் பிரச்னை பூதாகரமானது. இதனால், பட்ஜெட் தாக்கல் செய்ய ராகுல் காந்தியிடம் சென்று குமாரசாமி ஒப்புதல் பெறும் நிலை உருவானது. 
சித்தராமையா 'குண்டு': மங்களூருக்கு இயற்கை மருத்துவ சிகிச்சைக்குச் சென்றிருந்த சித்தராமையா, தனது ஆதரவாளர்களுடன் தனியாகப் பேசிக் கொண்டிருந்ததை படம் பிடித்தவர் தொலைக்காட்சியில் வெளியிட்டுவிட்டார். அதில், 
குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு, மக்களவைத் தேர்தல் வரை மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தொடரும் என்று தெரிவித்திருந்தார்.
இது மஜத மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்களிடையே மட்டுமல்ல, கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 5 ஆண்டுகளுக்கு ஆட்சி நீடிக்காது என்று சித்தராமையா சூசகமாக கூறிவிட்டதாகப் பேசப்பட்டது. இதனிடையே, கூட்டணி அரசில் அமைச்சர் பதவி கிடைக்காத எம்.பி.பாட்டீல் போன்ற முன்னாள் அமைச்சர்கள் காங்கிரஸில் கலகக் குரலாக மாறி, கூட்டணிக்கு வேட்டு வைக்கும் நிலையை உருவாக்கினர். இந்த விவகாரத்திலும் காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு அரசியல் சூட்டைத் தணித்தது. 
பட்ஜெட் பதைபதைப்பு: ஒருவழியாக, ஜூலை 5-ஆம் தேதி முதல்வர் குமாரசாமி, மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல் பட்ஜெட்டை வெற்றிகரமாக தாக்கல் செய்துவிட்டார். ஆனால், காங்கிரஸில் பட்ஜெட் குறித்த விமர்சனங்கள் கூட்டணி அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. கடலோர கர்நாடகம் மற்றும் வட கர்நாடகத்துக்கு பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லை என்று விமர்சித்துள்ள பாஜக, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளதை கடுமையாக விமர்சித்துள்ளது. வட கர்நாடகத்துக்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை என்று பாஜக மட்டுமல்லாது, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான எச்.கே.பாட்டீல், வெளிப்படையாக விமர்சித்துள்ளதோடு, குமாரசாமி, ஜி.பரமேஸ்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பட்ஜெட்டில் மஜத செல்வாக்குள்ள மாவட்டங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால், இது காங்கிரஸின் வளர்ச்சியைத் தடுக்கும் என்று அக் கட்சியின் எம்எல்.ஏ. சுதாகர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் "குண்டு': பெட்ரோல், டீசல் விலையேற்றத்துக்கு மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வந்த ராகுல் காந்தி, பிரதமர் மோடி "ஒரு பைசா அரசு' என கடும் வார்த்தைகளால் சாடியிருந்தார். மேலும் உடலை சீராக வைத்திருக்க அக்கறை செலுத்த வலியுறுத்தும் பிரதமர் மோடி, மக்களை வாட்டிவதைக்கும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கத் தயாரா? என்று ராகுல் காந்தி சவால் விட்டிருந்தார். பெட்ரோல், டீசல் விலை
யேற்றதைக் கண்டித்து காங்கிரஸ் நாடுதழுவிய போராட்டங்களை நடத்தியது.
இந்நிலையில், மஜத தனது பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலையை 2 சதவீதம் உயர்த்தியிருப்பது காங்கிரஸ் மீதான விமர்சனங்களை அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான முடிவை முதல்வர் குமாரசாமி தன்னிச்சையாக எடுத்ததாகவும், இது காங்கிரஸýக்கு கெட்டப் பெயரை தந்துள்ளதாகவும் அக் கட்சியின் மேலிடத்துக்கு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப் பிரச்னையை சட்டப்பேரவையில் எழுப்பத் திட்டமிட்டுள்ள பாஜக, மாநிலம் தழுவிய போராட்டங்களில் ஈடுபடுவது குறித்தும் யோசித்து வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வட கர்நாடகம் மற்றும் கடலோர கர்நாடகத்துக்கு போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாத பிரச்னை மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசில் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும் "அதிருப்தி' தெரியத் தொடங்கியுள்ளது. இது கூட்டணி அரசை தகர்க்குமா? தாக்குப் பிடிக்குமா? என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சு : மோடி

எய்ம்ஸ் பணிகளை முடக்கும் திமுக: அண்ணாமலை! | செய்திகள்: சில வரிகளில் | 25.02.26

”அரசியல்வாதிகளுக்கு பாடமாக விளங்கியவர்!” நல்லகண்ணு குறித்து முதல்வர் முக ஸ்டாலின்!

காதல் ரீசெட் ரிபீட் டிரைலர்!

பிரதமர் மோடியை கைகூப்பி வரவேற்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு!

SCROLL FOR NEXT