இந்தியா

நீதி ஆயோக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக திரண்ட எதிர்க்கட்சிகள்

DIN

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீதி ஆயோக் (மத்திய கொள்கைக் குழு) கூட்டத்தில், பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் ஓரணியில் திரண்டு, மத்திய அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.
மத்திய அரசு தேவையின்றி மாநில விவகாரங்களில் தலையிடக் கூடாது; கூட்டாட்சித் தத்துவத்தைப் பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
தில்லியில் நீதி ஆயோக் கவுன்சில் கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி பிரச்னைகள் உள்ளன. அதை தெரிந்து கொள்வதற்கு மத்திய அரசு முயற்சி செய்யவில்லை. கொள்கைகளை மட்டுமே மத்திய அரசு முடிவு செய்கிறது. ஆனால், அவற்றை அமல்படுத்துவது மாநில அரசுகள்தான். எனவே, மத்திய அரசு தேவையின்றி மாநில விவகாரங்களில் தலையிடக் கூடாது. கூட்டாட்சித் தத்துவத்தை மத்திய அரசு பின்பற்ற வேண்டும். மேலும், கூட்டாட்சி கட்டமைப்பை மத்திய அரசு வலுப்படுத்த வேண்டும் என்றார்.
முன்னதாக, கூட்டத்தில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதற்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று வலியுறுத்தினர். குமாரசாமி பேசும்போது, ""கர்நாடகத்தில் 85 லட்சம் விவசாயிகள், வங்கிகளில் கடன் வாங்கியுள்ளனர். மாநிலத்தில் நிலவிய கடும் வறட்சியால், அவர்களால் கடனை அடைக்க முடியவில்லை. எனவே, விவசாயிகளின் துயரத்தைப் போக்குவதற்காக, அவர்களின் கடன் ரத்து செய்யப்பட வேண்டும். அதில், 50 சதவீத தொகையை மத்திய அரசு வழங்கி உதவிட வேண்டும்'' என்றார்.
அதைத் தொடர்ந்து, மாநிலங்களுக்கு வரித்தொகையை பகிர்ந்தளிப்பது தொடர்பாக, 15-ஆவது நிதிக் குழு அளித்த பரிந்துரைகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று பினராயி விஜயன் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். மம்தா பானர்ஜி கூட்டத்தில் பேசும்போது, "" திட்ட கமிஷனாக இருந்த அமைப்பு, நீதி ஆயோக் என மாற்றப்பட்ட பிறகு, செயல்பாடுகளில் மாற்றம் வந்து விட்டது என்று மத்திய அரசு கூறுகிறது. எங்களைப் பொருத்தவரை, நீதி ஆயோக், மாநிலங்களுக்கு எதையும் செய்யவில்லை'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT