இந்தியா

சமூக வலைதளங்களில் சட்டவிரோதச் செயல்கள்

DIN

சமூக வலைதளங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் அதனைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இணைய வழிக் குற்றங்கள் தொடர்பாக புகார் அளிப்பதற்கான இணையதளத்தை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் இணைய வழி குற்றங்கள் தொடர்பான ஆய்வுக்கு கூட்டம் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது. 
அப்போது, அவர் கூறியதாவது: இணைய வழியில் நடைபெறும் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதுடன், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வழிகளில் குற்றங்கள் நிகழ்கின்றன. இவற்றைத் தடுப்பது மிகவும் அவசியம். இணையதளங்களில் சிறார்கள் தொடர்பான ஆபாசப் படங்கள் வெளியிடப்படுவது கவலையளிக்கும் பிரச்னையாக உள்ளது. இதனைத் தடுக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
சமீப காலமாக சமூக வலைதளங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதும், அவற்றைத் தவறாகப் பயன்படுத்துவதும் மிகவும் அதிகரித்து வருகிறது. தனிநபர்கள் குறித்து அவதூறுகளைப் பரப்புவதற்கு சமூக வலைதளங்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. தேசவிரோத சக்திகளும் இவற்றைப் பயன்படுத்தி நாட்டில் பிரச்னையை ஏற்படுத்த முயலுகின்றன. இதுபோன்ற செயல்களைத் தடுக்கும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்படும். சட்ட அமலாக்கத் துறைகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும்.
செல்லிடப் பேசி அழைப்புகள் மூலம் நிதி மோசடி செய்வது, இணையதள நிதி மோசடி தொடர்பாகவும் அதிக புகார்கள் பெறப்படுகின்றன. இது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் உரிய அறிவுறுத்தல்களை அளித்து வருகின்றன. அதனைப் பொதுமக்கள் உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும். இது தொடர்பாக தேசிய அளவில் விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.
மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர், உள்துறை செயலாளர் ராஜீவ் கெளபா, அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் பலர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT