இந்திய - சீன எல்லையில் பதற்றம் நீடிக்கிறது: பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பாம்ரே
இந்திய - சீன எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்துக் கொண்டே இருப்பதாக பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சுபாஷ் பாம்ரே கவலை தெரிவித்துள்ளார்.
இந்திய - சீன எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்துக் கொண்டே இருப்பதாக பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சுபாஷ் பாம்ரே கவலை தெரிவித்துள்ளார். மறுபுறம் பாகிஸ்தானை எடுத்துக் கொண்டால் அண்டை நாடுகளில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கொள்கைகளைப் பரப்புவதையே வாழ்வாதாரப் பணியாகக் கொண்டுள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
டோக்கா லாம் பிரச்னை காரணமாக கடந்த ஆண்டில் இந்தியா - சீனா இடையே அசாதாரண சூழல் நிலவியது. ராஜீய ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் அப்பிரச்னை முடிவுக்கு வந்தது.
இதனிடையே, கடந்த டிசம்பர் இறுதியில் அருணசாலப் பிரதேசத்தின் பைசிங் பகுதியில் சாலை செப்பனிடும் வாகனங்களுடன் (புல்டோஸர்கள்) சீனப் படைகள் மக்களோடு, மக்களாக ஊடுருவியதும் இருதரப்புக்கும் இடையேயான உறவில் விரிசலுக்கு வித்திட்டது.
அந்தப் பதற்றங்கள் சற்று தணிந்து நிலைமை சுமுகமாகிவிட்டதாகக் கருதியிருந்த நிலையில், சீன வீரர்கள் இந்திய எல்லை அருகே அதி நவீன ஆயுதங்களுடன் முகாமிட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள்அண்மையில் செய்தி வெளியிட்டன. க்யூடிஎஸ்-11 எனப்படும் நவீன தொழில்நுட்பத்திலான மின்னணு இயந்திர ஆயுதங்கள் ஒவ்வொரு சீன வீரர்களுக்கும் அளிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது ஒருபுறமிருக்க, பாகிஸ்தான் படைகள் காஷ்மீரில் அத்துமீறித் தாக்குதல் நடத்துவதும், அங்கிருந்து பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதும் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. இதனால், எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், தேசத்தைக் கட்டமைப்பதில் ராணுவத்தின் பங்களிப்பு என்ற தலைப்பிலான கருத்தரங்கு தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாம்ரா, பாதுகாப்புத் துறையினரிடையே பேசியதாவது:
இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் ஐஎஸ் பயங்கரவாதக் கொள்கைகளைப் பரப்புவதையே பாகிஸ்தான் முக்கிய நடவடிக்கையாகக் கொண்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஜம்மு - காஷ்மீரிலும் அமைதியற்ற சூழலை அந்நாடு உருவாக்குகிறது. இத்தகைய நடவடிக்கைகள் நாட்டுக்கு பெரும் சவாலாக விளங்கி வருகின்றன.
பாகிஸ்தானின் செயல்பாடுகள் இவ்வாறு இருக்க, மறு புறம் சீனப் படைகளும் எல்லையில் முகாமிட்டிருப்பது புதிய சர்ச்சைகளுக்கு அடித்தளமிட்டுள்ளது. எல்லை தாண்டி அவர்கள் வருவதும் பதற்றத்துக்கு வழி வகுக்கிறது. இதன் காரணமாக இரு நாட்டு எல்லைகள் இடையேயும் அசாதாரண நிலை நீடிக்கிறது என்றார் அவர்.