இந்தியா

அதிகாரத்தை மீறிச் செயல்படுகிறது அமலாக்கத்துறை: உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் புதிய மனு! 

UNI

புதுதில்லி: தனக்கு சம்மன்கள் அனுப்பி விசாரிப்பதில் அமலாக்கத்துறை தனது அதிகாரத்தை மீறிச் செயல்படுகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் புதிய மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இந்த விவகாரத்தில் அந்த நிறுவனத்துக்கு சாதகமாக கார்த்தி சிதம்பரம் செயல்பட்டார். இதற்காக அவருடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு ஐஎன்எக்ஸ் மீடியா ரூ.35 கோடியை கைமாறாக அளித்தது என்றும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

இதில் இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலத்தை புதிய ஆதாரமாகக் கொண்டு கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. இதே விவகாரத்தில் நடைபெற்ற கருப்புப் பண முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தற்பொழுது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான இந்திராணி முகர்ஜி தனது மகள் ஷீனா போராவை  கொலை செய்த வழக்கில் மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கார்த்தி சிதம்பரத்தை பலத்த பாதுகாப்புடன் ஞாயிறு காலை 11.15 மணியளவில் சிபிஐ அதிகாரிகள் இந்த சிறைச்சாலைக்கு அழைத்து வந்தனர்.

சிறையில் இந்திராணி முகர்ஜியிடமும், கார்த்தி சிதம்பரத்திடமும் கூட்டாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணை நடைபெற்ற அறையில் சிபிஐ அதிகாரிகள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. சிறைக்காவலர்கள் அந்த அறைக்கு வெளியே நிறுத்தப்பட்டனர். இருவரிடமும் சுமார் சிபிஐ அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரித்தனர். விசாரணை முழுவதும் விடியோவில் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தனக்கு சம்மன்கள் அனுப்பி விசாரிப்பதில் அமலாக்கத்துறை தனது அதிகாரத்தை மீறிச் செயல்படுகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் புதிய மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார்.

அவர் தனது மனுவில் அமலாக்கத்துறை அதற்கு உரிய அதிகாரங்களை மீறி தனக்கு சம்மன்கள் அனுப்பி விசாரிக்கிறது என்றும், எனவே அமலாக்கத்துறையின் சம்மன்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவானது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் தொடர்பான பிற வழக்குகளுடன்  நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா  தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT