இந்தியா

குறைந்தபட்ச இருப்பு: அபராதத்தைக் குறைத்தது எஸ்பிஐ: ஏப்ரல் 1 முதல் அமல்

DIN

குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதக் கட்டணத்தை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 75 சதவீதம் வரை குறைத்துள்ளது. இது, வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அந்த வங்கி அறிவித்துள்ளது. அதேநேரத்தில், குறைந்தபட்ச இருப்புத் தொகை அளவை பாரத ஸ்டேட் வங்கி குறைக்கவில்லை.

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியாகத் திகழும் எஸ்பிஐ-யில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்போர் குறைந்தபட்ச இருப்புத் தொகையை கட்டாயம் பராமரிக்க வேண்டும். இல்லையெனில், அவர்களுக்கு அபராதக் கட்டணமாக குறிப்பிட்ட தொகையை வசூலிக்கும் நடைமுறையை எஸ்பிஐ கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் அமல்படுத்தியது. அதன்படி, பெருநகரங்களில் இருக்கும் எஸ்பிஐ வங்கிக் கிளைகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை (ரூ.3,000) பராமரிக்காத நபர்களுக்கு ரூ.50 மற்றும் ஜிஎஸ்டி வரியும், நகர்ப்புறம் (ரூ.2,000), கிராமப்புறப் பகுதிகளில் (ரூ.1,000) இருக்கும் எஸ்பிஐ கிளைகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காதோருக்கு ரூ.40-ம் அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த அபராதக் கட்டணத்தை எஸ்பிஐ தற்போது 75 சதவீதம் வரை அதிரடியாக குறைத்துள்ளது. இது ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து மும்பையில் எஸ்பிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் (ரீடெய்ல் மற்றும் டிஜிட்டல் பேங்கிங்) பி.கே.குப்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெருநகர வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்போருக்கு விதிக்கப்பட்டு வந்த அபராதக் கட்டணம் ரூ.15-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையுடன் ஜிஎஸ்டி வரியையும் செலுத்த வேண்டும்.
நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காதோருக்கு விதிக்கப்பட்ட அபராதக் கட்டணம் முறையே ரூ.12, ரூ.10ஆக குறைக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஜிஎஸ்டி வரியும் செலுத்த வேண்டும்.
இந்தக் கட்டணக் குறைப்பு நடவடிக்கையால், எஸ்பிஐ வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள 25 கோடி வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள். வாடிக்கையாளர்களின் கருத்துகளுக்கும், அவர்களது உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, இந்த கட்டணக் குறைப்பு நடவடிக்கையை எஸ்பிஐ எடுத்துள்ளது. வாடிக்கையாளர்களின் நலன்களுக்கு எப்போதும் எஸ்பிஐ வங்கி முதல் முன்னுரிமை கொடுக்கும்.
இதுமட்டுமன்றி, வாடிக்கையாளர்கள் தற்போது தாங்கள் வைத்துள்ள சேமிப்புக் கணக்குகளை, அடிப்படை சேமிப்புக் கணக்காக மாற்றிக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த அடிப்படை சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கவில்லை என்றால் அபராதக் கட்டணம் விதிக்கப்பட மாட்டாது என்றார் குப்தா.
நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கிக் கிளைகளில் 41 கோடி சேமிப்புக் கணக்குகள் உள்ளன. அவற்றில் 16 கோடி கணக்குகள், ஜன்தன், அடிப்படை சேமிப்புக் கணக்கு, ஓய்வூதியதாரர்கள், சிறார்கள், சமூக பாதுகாப்பு நலத் திட்ட பயனாளிகளின் கணக்குகள் ஆகும். இந்த 16 கோடி கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத காரணத்துக்காக விதிக்கப்படும் அபராதக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து பாரத ஸ்டேட் வங்கிக்கு அபராதம் மூலம் கடந்த ஏப்ரல்-நவம்பர் காலகட்டத்தில் ரூ.1,771 கோடி கிடைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT