இந்தியா

சுஷ்மாவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்: காங்கிரஸ் முடிவு

தினமணி

இராக்கில் 39 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கடத்திக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தவறான தகவல்களைத் தெரிவித்ததாகக் கூறி வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு எதிராக மாநிலங்களவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. மக்களின் உணர்வுகளோடு மத்திய அரசு விளையாடுவதாகவும் அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
 கடந்த 2014-இல் இராக்கில் இந்தியர்கள் 40 பேரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். அவர்களில் ஒருவர் தப்பி வந்து விட்டார். மற்றவர்களின் நிலை என்ன? என்பது தெரியாமல் இருந்து வந்தது.
 இந்தியர்களை பயங்கரவாதிகள் அடுத்தடுத்து சுட்டுக் கொன்றதாக தப்பி வந்த நபர் தகவல் அளித்தார். ஆனால், அதை மத்திய அரசு மறுத்தது. மேலும், இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த சுஷ்மா ஸ்வராஜ், கடத்தப்பட்ட இந்தியர்கள் உயிருடன் இருப்பதாகவே தெரிவித்தார்.
 இந்த சூழலில், கடந்த இரு நாள்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பேசிய சுஷ்மா, 39 இந்தியர்களும் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார். அவர்களது உடல்கள் விரைவில் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறினார்.
 இதையடுத்து, வெளியுறவுத் துறை அமைச்சரின் செயல்பாடுகளை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
 இதுதொடர்பாக அக்கட்சியின் எம்.பி. அம்பிகா சோனி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 கடத்தப்பட்ட இந்தியர்களின் நிலை குறித்து சந்தேகம் எழுப்பும்போது எல்லாம் அவர்கள் அனைவரும் உயிருடன் இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
 காங்கிரஸ் கட்சிக்கு அவர்கள் இறந்துவிட்டதாகத் தகவல் கிடைத்தது. ஆனால், அதனை சுஷ்மாவோ, மத்திய அரசோ ஏற்றுக் கொள்ளவில்லை.
 நம்பத்தகுந்த வட்டாரங்களின் மூலம் தங்களுக்குத் தகவல் கிடைத்து வருவதாக மத்திய அரசு தொடர்ந்து கூறிவந்தது.
 அந்த நம்பத்தகுந்த வட்டாரம் எது? எந்த ஆவணங்களின் அடிப்படையில் அவர்கள் உயிருடன் உள்ளதாகத் தெரிவித்தீர்கள்? என்ற கேள்விக்கு அரசிடம் பதில் இல்லை. இறுதியில் காங்கிரஸ் கட்சி இவ்வளவு நாள்களாக கூறி வந்ததற்கு ஏற்ப, கடத்தப்பட்ட இந்தியர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாக சுஷ்மா அறிவித்துள்ளார்.
 இதன் மூலம் இதுவரை அவர் அவையில் தவறானத் தகவல்களைத் தெரிவித்துள்ளார் என்பது தெளிவாகியுள்ளது. எனவே, சுஷ்மாவுக்கு எதிராக மாநிலங்களவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
 இதேபோன்று பிரதாப் பாஜ்வா, சாம்ஷேர் சிங் தல்லோ உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களும் பாஜகவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர உள்ளதாகக் கூறியுள்ளனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஜா நிறக் காரிகை!

SCROLL FOR NEXT