காஸியாபாத்: மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நகைக் கடையில் 9 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் தில்லி காவல்துறையைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து உத்தரப்பிரதேச மாநில காவல்துறை உயர் அதிகாரி பிரஷாந்த் குமார் கூறுகையில், மார்ச் 18ம் தேதி, சாஹிபாபாத் ரயில் நிலையத்தில், காவல்துறை உடையில் இருந்த இரண்டு பேர் தங்க நகைகளைக் கொள்ளையடித்த வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளைக் கைது செய்த தனிப் படையினரை பாராட்டினார்.
கைது செய்யப்பட்டவர்கள், தில்லி காவல்துறையில் காவல்துறை துணை ஆய்வாளர் சதேந்திர சிங் மற்றும் பிராம் பால் என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் கொள்ளையடித்த நகைகளின் மதிப்பு ரூ.3 கோடி.
தில்லி காவல்துறையில் பணியாற்றும் இவர்கள் இரண்டு பேரும் தொழில்முறை கொள்ளையர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தங்க நகைகளை மொத்த விற்பனை செய்யும் வியாபாரி மூலமாக அதிக தங்க நகைகள் மீரட்டில் இருந்து தில்லி வரும் தகவல் அறிந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டதை இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இதற்கு முன்பும் இதுபோன்ற இரண்டு கொள்ளைகளில் ஈடுபட்டதையும் அவர்கள் வாக்குமூலமாக அளித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.