கர்நாடகத்தில் யாருக்கு ஆட்சி?: இன்று பிற்பகலில் முடிவு தெரியும்
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை (மே 15) எண்ணப்படுகின்றன.
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை (மே 15) எண்ணப்படுகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்தப்பட்டிருப்பதால், வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும். இதனால், கர்நாடகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார்? என்பது செவ்வாய்க்கிழமை பிற்பகலுக்குள் தெரிய வந்துவிடும்.
கர்நாடக சட்டப் பேரவையில் உள்ள 224 தொகுதிகளில் 222 இடங்களுக்கு கடந்த 12-ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. ஆர்.ஆர். நகர், ஜெயாநகர் ஆகிய 2 தொகுதிகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 222 தொகுதிகளில் பதிவான வாக்குகள், மாநிலம் முழுவதும் உள்ள 40 வாக்கு எண்ணும் மையங்களில் செவ்வாய்க்கிழமை எண்ணப்படவுள்ளன. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகளும், அதன்பிறகு பிற வாக்குகளும் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே, முன்னணி நிலவரம் தெரிய வந்துவிடும்.
தேர்தல் முடிவு, கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸýக்கு சாதகமாக இருக்குமானால், கடந்த 1985ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த கட்சியும் தொடர்ந்து 2ஆவது முறையாக ஆட்சியைப் பிடித்ததில்லை என்பதை காங்கிரஸ் முறியடித்து புதிய சாதனையைப் படைக்கும். அப்படி காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், முதல்வர் சித்தராமையா மீண்டும் முதல்வராக்கப்படுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனெனில், தேர்தலின்போது சித்தராமையாவை முன்னிறுத்தி போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, அவரை முதல்வர் பதவி வேட்பாளராக அறிவிக்கவில்லை.
இதேபோல், தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை காங்கிரஸ் மேலிடம் முதல்வராக்கினால், அதை ஏற்கத் தயாராக இருப்பதாக சித்தராமையா குறிப்பிட்டிருந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநிலத் தலைவர் ஜி. பரமேஸ்வர் ஆகியோர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை முதல்வராக்க காங்கிரஸ் மேலிடம் விரும்பும்பட்சத்தில், கார்கே, பரமேஸ்வரர் ஆகியோரில் ஒருவர் முதல்வராக நியமிக்கப்படவே வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
அதேநேரத்தில், கர்நாடகத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும்பட்சத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு மேலும் அதிகரிக்கும். தேர்தலில் அக்கட்சி முதல்வர் பதவி வேட்பாளராக முன்னிறுத்திய முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீண்டும் முதல்வராக பதவியேற்பார்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்கவுள்ளது. எனவே கர்நாடக தேர்தலில் வெற்றி பெறுவது மத்தியில் ஆளும் பாஜகவுக்கு மிகவும் அவசியமாகும்.
தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகள், மாநிலத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார்? என்பதை தீர்மானிக்கும் சக்தியாக முன்னாள் பிரதமர் தேவெ கௌடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி உருவெடுக்கும் எனத் தெரிவிக்கின்றன. இருப்பினும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியோ தங்கள் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும், முதல்வராக குமாரசாமி பதவியேற்பார் எனத் தெரிவித்துள்ளது.
எந்த கட்சிக்கும் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டப் பேரவை ஏற்படுமானால், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் செல்வாக்கு அதிகரிக்கும். கர்நாடகத்தில் காங்கிரஸ், பாஜக ஆகியவற்றுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கடந்த காலங்களில் கூட்டணி அமைத்துள்ளது. எனினும், இந்த முறை எந்த கட்சிக்கு ஆட்சியமைக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு அளிக்கும் என்பதை உறுதியாக கணிக்க முடியவில்லை.
காங்கிரஸ் ஆட்சியமைக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு அளிக்குமானால், தனது கட்சியில் இருந்து வெளியேறி காங்கிரஸில் இணைந்த சித்தராமையா முதல்வராக அக்கட்சி விரும்பாது. காங்கிரஸில் இருக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை முதல்வராக்க வேண்டுமென அக்கட்சி நிபந்தனை விதிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.