கோடை வெப்பம்: தெலங்கானாவை எச்சரிக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம்
ஏற்கனவே மிகக் கடுமையான வெயில் கொளுத்திவரும் நிலையில், தெலங்கானா மாநிலத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருப்பது அம்மாநில மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே மிகக் கடுமையான வெயில் கொளுத்திவரும் நிலையில், தெலங்கானா மாநிலத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருப்பது அம்மாநில மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
தெலங்கானாவின் அடிலாபாத் மற்றும் ராமகுண்டம் பகுதிகளில் சனிக்கிழமையன்று 44 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. (பாரன்ஹீட்டில் சொல்ல வேண்டும் என்றால் 111 டிகிரி வெயில்)
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பி. ராஜாராவ் கூறுகையில், தெலங்கானாவில் பகல் நேரத்தில் வெப்ப அளவானது 43-44 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலேயே தொடர்ந்து நீடிக்கும். ஒரு வேளை 44 டிகிரிக்கும் மேல் வெயில் பதிவானால் அன்றைய தினத்தின் வெப்ப அலை குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவிக்கும் என்று கூறியுள்ளார்.
Advertisement
இதுபோன்ற வெப்ப நிலையைக் குறிப்பிடும்போது வெப்பஅலை என்று சொல்கிறார்கள். அதற்குக் காரணம், கோடைக்காலத்தில் இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவும். இயல்பான அளவை விட 5 அல்லது 6 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் உயரும் போது அதனை வெப்ப அலை என்ற அளவீட்டின் படி அளக்கிறார்கள்.
தெலங்கானாவின் வெப்ப அளவு குறித்து மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை, பஞ்சாயத் ராஜ் துறை, ஊரக மேம்பாட்டுத் துறைகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைத் தகவலை அனுப்பியுள்ளது. இது குறித்து இந்தத் துறைகளிடம் இருந்து பிற துறைகளுக்கும் அறிவுறுத்தல் செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கடுமையான கோடை வெப்பத்தில் இருந்து எப்படி தங்களை தற்காத்துக் கொள்வது என்பது குறித்து, மாநிலத்தின் பல்வேறு துறைகளின் சார்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளும் விழிப்புணர்வு வாசகங்களை பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் பரப்பப்பட்டு வருகிறது.
மாநிலத்தில் வெப்ப அளவானது 45 டிகிரி செல்சியஸ் அளவை விட தாண்டினால், உடனடியாக மாநில பேரிடர் மேலாண்மைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கவும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.