இந்தியா

அதிகரித்து வரும் பெட்ரோல்-டீசல் விலையை கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை: மத்திய அரசு

DIN

அதிகரித்து வரும் பெட்ரோல்-டீசல் விலையை கட்டுப்படுத்த அரசு விரைவில் சில நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பதற்கு, சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருள்கள் விலை உயர்ந்து வருவதே காரணம் என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனினும், விலை உயர்வை கட்டுப்படுத்த பெட்ரோல்- டீசல் மீது விதிக்கப்பட்டுள்ள கலால் வரியை குறைக்க வேண்டும் என்றும், ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல்-டீசலை கொண்டு வர வேண்டும் என்றும் ஃபிக்கி, அசோசேம் போன்ற தொழில்துறை கூட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர், பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு இந்த வாரத்தில் சில நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வினால், நெருக்கடி போன்ற சூழ்நிலையை மத்திய அரசு எதிர்கொண்டுள்ளது. இதை சில நடவடிக்கைகள் மூலம் மத்திய அரசு கையாளத் திட்டமிட்டுள்ளது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வு குறித்து, பெட்ரோலியத் துறை அமைச்சகத்துடன் மத்திய நிதியமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. கலால் வரியை குறைப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் மறுப்பதற்கில்லை. அதுதொடர்பான முடிவை எடுக்கும்போது, கலால் வரி குறைக்கப்பட்டால், நிகழ் நிதியாண்டில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என்பதையும் அரசு கவனத்தில் கொள்ளும். 

சில்லரைச் சந்தையில் பெட்ரோலியப் பொருள்கள் விலை 20-35 சதவீதம் வரை உயர்வதற்கு, மத்திய அரசு, மாநில அரசுகள் விதிக்கும் வரிகள்தான் காரணம். பெட்ரோலியப் பொருள்கள் விலை உயர்வதால், மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வருமானம் அதிகரிக்கும். எனவே, விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசுகளும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.67.97ஆக குறைந்துள்ளது. இது கடந்த 16 மாதங்களில் இல்லாத சரிவாகும். இதுவும் பெட்ரோலியப் பொருள்கள் விலை அதிகரித்திருப்பதற்கு காரணமாகும் என்று மத்திய அரசு அதிகாரி குறிப்பிட்டார்.

பெட்ரோல் மீது ரூ.19.48-ம், டீசல் மீது ரூ.15.33-ம் கலால் வரியாக மத்திய அரசு விதித்துள்ளது. இதேபோல், பல்வேறு மாநிலங்களும் வாட் வரியை விதித்துள்ளன. பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியில் ரூ.1 குறைக்கப்பட்டாலும், அதனால் ரூ.13,000 கோடி இழப்பு ஏற்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

சென்னையில் பெட்ரோல் விலை புதிய உச்சம்

சென்னையில் பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவுக்கு செவ்வாய்க்கிழமை உயர்ந்திருந்தது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகள் உயர்ந்து ரூ.79.79ஆக விற்கப்பட்டது. கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.55ஆக இருந்தது. அதற்குப் பிறகு, சென்னையில் பெட்ரோல் விலை முதல்முறையாக தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தில்லி, மும்பை ஆகிய நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து, முறையே ரூ.76.87க்கும்,ரூ.84.70க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்து, ரூ.79.53க்கு விற்கப்பட்டது. நாடு முழுவதும் டீசல் விலையும் அதிகரித்திருந்தது. 
தில்லியில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.08ஆகவும், கொல்கத்தாவில் ரூ.70.63ஆகவும், மும்பையில் ரூ.72.48ஆகவும், சென்னையில் ரூ.71.87ஆகவும் 
இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

SCROLL FOR NEXT