இந்தியா

ஆந்திரம்: சிபிஐ செயல்பாடுகளுக்கு சந்திரபாபு நாயுடு தடை!

DIN


ஆந்திர மாநிலத்தில் சிபிஐ அமைப்பு தனது அதிகாரத்தை செயல்படுத்துவதற்காக வழங்கியிருந்த பொது ஒப்புதலை அந்த மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது.
எனவே, இனி ஆந்திரத்தில் சிபிஐ வழக்கு விசாரணையை மேற்கொள்வதாக இருந்தால் மாநில அரசிடம் உரிய முன் அனுமதி பெற்றாக வேண்டும்.
மத்திய அரசுடன் மோதல் போக்கு உள்ள நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக உள்துறை முதன்மைச் செயலர் ஏ.ஆர். அனுராதா கடந்த 8-ஆம் தேதி பிறப்பித்த ரகசிய அரசு உத்தரவு, வியாழக்கிழமை இரவு வெளியானது.
அந்த உத்தரவு குறித்து ஆந்திர துணை முதல்வர் சின்ன ராஜப்பா தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 
சிபிஐ அமைப்பின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. எனினும், அதன் உயரதிகாரிகள் (சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா) மீது சமீபத்தில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதை அடுத்து, மாநிலத்தில் சிபிஐ அமைப்பின் செயல் அதிகாரத்துக்கான பொது ஒப்புதலை திரும்பப் பெற்றுள்ளோம். எனவே, இனி ஆந்திர மாநிலத்தில் எந்தவொரு வழக்கு விசாரணையை மேற்கொள்வதாக இருந்தாலும், மாநில அரசின் முன் அனுமதியை சிபிஐ பெற வேண்டும்.
வழக்குகள் விசாரணை தொடர்பாக சிபிஐ அனுமதி கோரும் பட்சத்தில், தேவையான ஒப்புதலை வழங்குவோம். எனினும், மத்திய அரசு அதிகாரிகள் மீதான விசாரணைக்கு முன்பாக சிபிஐ அனுமதி பெற வேண்டியதில்லை. வழக்குரைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகளின் ஆலோசனையின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கர்நாடகம் கூட, இதேபோன்று சிபிஐக்கான பொது ஒப்புதலை திரும்பப் பெற்றுள்ளது என்று துணை முதல்வர் சின்ன ராஜப்பா கூறினார்.
சிபிஐ செயல் அதிகாரத்துக்கான பொது ஒப்புதலை திரும்பப் பெறுவது தொடர்பாக ஆந்திர அரசு சமீபத்தில் வெளியிட்டிருந்த உத்தரவில், தில்லி சிறப்பு காவல் அமைப்புச் சட்டம் 1946-இன் கீழ், வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை அந்த அமைப்பைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் (சிபிஐ) ஆந்திர மாநிலத்தில் அமல்படுத்துவதற்கான பொது ஒப்புதலை மாநில அரசு திரும்பப் பெறுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
சிபிஐ அமைப்பானது, தில்லி சிறப்பு காவல் அமைப்புச் சட்டத்தின் கீழ் செயல்படுகிறது. அந்தச் சட்டத்தின் 6-ஆவது பிரிவின் கீழ், ஒரு மாநில அரசானது தனது நிர்வாகத்துக்கு உள்பட்ட இடத்தில் சிபிஐ அமைப்பு தனது அதிகாரத்தை செயல்படுத்துவதற்கான பொது ஒப்புதலை வழக்கமாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT