இந்தியா

ஆதார் இணைக்காத வங்கிக் கணக்கில் சம்பளத்தை நிறுத்திவைக்கக் கூடாது: மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு

DIN

வங்கிக் கணக்கில் ஆதாரை இணைக்கவில்லை என்பதற்காக அந்த வங்கிக் கணக்கில் சம்பளத்தை செலுத்தாமல் நிறுத்தி வைக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மும்பை துறைமுகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகத்திடம் இருந்து கடந்த டிசம்பர் 2015-ஆம் ஆண்டு எனக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில் துறைமுகத்தில் பணியாற்றும் தங்கள் அதிகார வரம்புக்குள் வரும் தொழிலாளர்கள் அனைவரும், தங்களது சம்பளம் வரவு வைக்கப்படும் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆதார் இணைப்பது எனது அடிப்படை உரிமையைப் பறிக்கும் என்ற காரணத்தால் நான் எனது வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை. இதையடுத்து, கடந்த 2016 ஜூலை முதல் எனது சம்பளம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மேலும், வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் கட்டாயமில்லை என்று கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் அவர் நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டினார்.
இதையடுத்து நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா, எஸ்.கே.ஷிண்டே ஆகியோர் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது: வங்கிக் கணக்கில் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்று கூறி ஒரு ஊழியரின் சம்பளத்தை எவ்வாறு நிறுத்தி வைக்க முடியும்? இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைப் பின்பற்ற வேண்டும். ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்று கூறி வங்கிக் கணக்கில் சம்பளப் பணத்தை அரசு செலுத்தாமல் நிறுத்தி வைத்தது ஏற்க முடியாதது. எனவே, இதுவரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியத்தை அவரது சம்பள வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் இறுதிக் கட்ட விசாரணை ஜனவரி 8-ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT