முகப்பு
இந்தியா

ரோஹிங்கயாக்களின் பயோமெட்ரிக் தகவல்களை திரட்ட மாநிலங்களுக்கு அறிவுரை: ராஜ்நாத்

ரோஹிங்கயாக்களை அடையாளம் கண்டு அவர்களது பயோமெட்ரிக் தகவல்களை திரட்டுமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:57 PM
பகிர்:


கொல்கத்தா: ரோஹிங்கயாக்களை அடையாளம் கண்டு அவர்களது பயோமெட்ரிக் தகவல்களை திரட்டுமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மாநில அரசுகளால் சேகரிக்கப்பட்ட பயோ மெட்ரிக் தகவல்களை மத்திய அரசு மியான்மர் அரசுக்கு அனுப்பி வைக்கும் என்றும் அவர் கூறினார்.

கொல்கத்தாவில் இன்று மாநில உறவுகள் மற்றும் பாதுகாப்புத் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்ற ராஜ்நாத் சிங் இதனைத் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்க்கண்ட் முதல்வர் ரகுவர் தாஸ், பிகார் துணை முதல்வர் சுஷீல் குமார் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரோஹிங்கயா, சட்ட விரோதமாக குடியேறியவர்களின் பயோமெட்ரிக் விவரங்களை திரட்டுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.

ரோஹிங்கயா உள்ளிட்ட சட்ட விரோதமாக குடியேறியவர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்கிறார்கள். எனவே, நாட்டின் பாதுகாப்புக் கருதி, அவர்களை எளிதில் அடையாளம் காண்பதற்காக, இந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்திருந்தது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை கூறியதாவது: 
ரோஹிங்கயாக்கள் மற்றும் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் ஆகியோரின் பயோமெட்ரிக் விவரங்களை உள்ளூர் காவல் துறையினர் மூலம் திரட்ட வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விவரங்களைத் திரட்டுவதால், அவர்களுக்கு அரசு சார்பில் சட்டப்பூர்வமான ஆவணம் எதுவும் வழங்கப்பட மாட்டாது. இந்தியாவுக்கு சட்டப்பூர்வமாக வருகை தரும் இந்தியர் அல்லாதோர், குறைந்தது 6 மாதங்கள் வசித்தால்தான், அவர்கள் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், ரோஹிங்கயா அகதிகளை சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் என்று அரசு அறிவித்துள்ளதால், அவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட மாட்டாது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.