இந்தியா

தனி நபர் பயங்கரவாதத் தாக்குதல் பெரும் சவாலாக உள்ளது: ராஜ்நாத் சிங்

DIN


தனி நபர் பயங்கரவாதத் தாக்குதல் உள்ளிட்டவற்றால் உருவாகியுள்ள அச்சுறுத்தல், தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு அமைப்புகளுக்கு பெரும் சவாலாக உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
பயங்கரவாத எதிர்ப்புப் படையான தேசியப் பாதுகாப்புப் படையின் (என்எஸ்ஜி) 34-ஆவது எழுச்சி தின நிகழ்ச்சி குருகிராம் மானேசரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேசியப் பாதுகாப்புப் படையினர் பல்வேறு வீரதீர சாகசங்களை நிகழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசியதாவது:
மும்பையில் 2008-இல் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலின் போது தேசியப் பாதுகாப்புப் படையினர் தங்களது சிறந்த ஒருங்கிணைப்பை வெளிப்படுத்தினர். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு பெரிய அளவிலான பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை. அண்மையில் நியூயார்க், லண்டன் நகரங்களில் வாகனங்களைப் பயன்படுத்தி ஏராளமான மக்கள் கொல்லப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 
இந்தியாவைப் பொருத்தமட்டில் நீயே இதை செய், தனி நபராக வந்து தாக்குதல் போன்ற வகையான பயங்கரவாதத் தாக்குதல் பாதுகாப்பு அமைப்புகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதுபோன்ற அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில், நமது உத்திகளை புதுப்பிப்பதுடன் மாற்றிக் கொள்ளவும் தயாராக வேண்டும். பயங்கரவாதம் என்பது ஒரு நாட்டுடன் முடிந்துவிடுவதில்லை. அது, ஒட்டுமொத்த உலக மக்களையும் பாதிக்கச் செய்கிறது.
பயங்கரவாதிகளின் சித்தாந்தங்களை பரப்புவதில் சமூக ஊடகங்கள் உதவியாக உள்ளன. 2008-ஆம் ஆண்டிலிருந்து உள்நாட்டில் பெரிய அளவிலான பயங்கரவாதத் தாக்குதல் ஏதும் ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுவதில் தேசியப் பாதுகாப்புப் படை மற்றும் இதர பாதுகாப்புப் படைகள், அமைப்புகள் ஆகியவை திறம்பட செயல்பட்டுள்ளன.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் தவிர, பிற பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல், கிளர்ச்சிக்கான முயற்சி ஆகியவற்றை முறியடித்ததில் இந்த அமைப்புகள் வெற்றி கண்டுள்ளன. 
பயங்கரவாதத் தாக்குதல் நிகழும் போது அதற்கான நடவடிக்கையில் முதலில் ஈடுபடுபவர்களாக காவல் துறையினர் உள்ளனர். அத்துறையினர் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் திறன்களை உருவாக்கிக் கொள்வது அவசியமாகும் என்றார் ராஜ்நாத் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT