இந்தியா

தலைமைச் செயலர் தாக்கப்பட்ட விவகாரம்: கேஜரிவால், சிசோடியாவுக்கு தில்லி நீதிமன்றம் சம்மன்

DIN

தில்லி அரசு தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, 11 எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு அழைப்பாணை (சம்மன்) அனுப்ப தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. 
நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி தில்லி காவல் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை பரிசீலித்த கூடுதல் தலைமை பெருநகர் மாஜிஸ்திரேட் சமர் விஷால் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
கடந்த மாதம் 13-ஆம் தேதி போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், முதல்வர் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் அமானத்துல்லா கான், பிரகாஷ் ஜர்வால், நிதின் தியாகி, ரிதுராஜ் கோவிந்த், சஞ்சீவ் ஜா, அஜய் தத், ராஜேஷ் ரிஷி, ராஜேஷ் குப்தா, மதன் லால், பர்வீன் குமார், தினேஷ் மொஹானியா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. 
இது தொடர்பான வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்த வழக்கு விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும். ஊடகங்கள் இந்த விவகாரத்தை விசாரணையைப் போல கையாளுகின்றன. எனவே, வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும்' என்றார். இதற்கு தில்லி காவல்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர் எதிர்ப்புத் தெரிவித்தார்.
இதையடுத்து, குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை ஊடகங்கள் வெளியிடுவதற்கு தடை விதிக்க மறுத்ததுடன், காவல்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை பரிசீலிப்பது குறித்த விசாரணையை செப்டம்பர் 18-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அழைப்பாணை அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். தில்லியில் பிப்ரவரி 19-ஆம் தேதி இரவு முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் அரசு இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இரண்டு ஆம் ஆத்மி எம்எல்ஏக்களால் தான் தாக்கப்பட்டதாக அன்ஷு பிரகாஷ் போலீஸில் புகார் அளித்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

திருவட்டாறு அருகே தடுப்பணையில் மூழ்கி பொறியியல் மாணவா் உயிரிழப்பு

3 சிறாா் உள்ளிட்ட 7 போ் கைது: 60 பவுன் நகைகள் பறிமுதல்

SCROLL FOR NEXT