இந்தியா

ஊரக சுகாதார ஆர்வலர்களுடன் கலந்துரையாடிய பிரதமர்!

DIN


அங்கீகரிக்கப்பட்ட ஊரக சுகாதார ஆர்வலர்களுடன் (ஆஷா) பிரதமர் மோடி வியாழக்கிழமை கலந்துரையாடினார். அப்போது அவர்களின் பணிகளையும், பங்களிப்பையும் பிரதமர் பாராட்டினார்.
கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு சுகாதாரம் மற்றும் மருத்துவச் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆஷா' என்ற திட்டம் கடந்த 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பத்தாம் வகுப்பு நிறைவு செய்த ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த 45 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்தத் திட்டத்தின் கீழ் சுகாதார ஆர்வலர்களாக இணைய முடியும்.
பேறு காலங்களிலும், பிரசவ நேரங்களிலும் மருத்துமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்வது குறித்தும், குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடுவது குறித்தும் கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவர்களது முக்கியப் பணிகளாகும். அவற்றைத் தவிர, பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் அவர்கள் பங்காற்ற வேண்டும்.
அவர்களது பணிகளை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத் தொகையாக மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்தது. அது தற்போது ரூ. 2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. புள்ளிவிவரங்களின்படி தற்போது நாட்டில் 10 லட்சத்து 23 ஆயிரம் ஊரக சுகாதார ஆர்வலர்கள் உள்ளனர். அவர்களில் சிலருடன் பிரதமர் மோடி வியாழக்கிழமை கலந்துரையாடினார். மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆர்வலர்களுடன் காணொலி முறையிலும் அவர் உரையாடினார்.
அப்போது, அவரிடம் பேசிய ஆர்வலர்கள், தங்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத் தொகையை இரு மடங்காக உயர்த்தியதற்கும், காப்பீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததற்கும் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கைகளின்போது எதிர்கொண்ட சவால்களையும், அனுபவங்களையும் ஆர்வலர்கள் பகிர்ந்துகொண்டனர்.
மத்திய அரசின் ஆஷா திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் எண்ணற்ற ஏழை கர்ப்பிணிகளையும், அவர்களது குழந்தைகளையும் காப்பாற்றியிருப்பதாகவும் அவர்கள் கூறினர். அதைக் கேட்ட பிரதமர் மோடி, ஊரக சுகாதார ஆர்வலர்களை வெகுவாக பாராட்டியதுடன், அர்ப்பணிப்புணர்வுடன் தொடர்ந்து பணியாற்றுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஊரக சுகாதார மேம்பாட்டுக்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் நலத் திட்டங்களையும், நடவடிக்கைகளையும் அப்போது பிரதமர் மோடி விளக்கிக் கூறினார். இதேபோன்று காணொலி முறையில் அங்கன்வாடி ஊழியர்களுடன் பிரதமர் மோடி புதன்கிழமை கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT