இந்தியா

ரஃபேல் ஒப்பந்தத்தில் நஷ்டத்தைக் கண்டுபிடித்தவர் புறக்கணிப்பு.. கண்டு கொள்ளாதவருக்கு உயர் பதவி: காங்கிரஸ் கடும் விமர்சனம் 

IANS

புது தில்லி: ரஃபேல் ஒப்பந்தத்தில் அரசுக்கு ஏற்படும் நஷ்டத்தை முதலில் கண்டுபிடித்த அரசு அதிகாரி  புறக்கணிக்கப்பட்டர் என்றும், அதனைக் கண்டு கொள்ளாமல் அரசுக்கு சாதகமாக செயல்பட்ட உயர் அதிகாரிக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டது என்றும் காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. 

இந்திய விமானப் படைக்கு பிரான்ஸிடமிருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்காக மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொண்டது. ரூ.58,000 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில், அதிக விலை கொடுத்து விமானங்கள் வாங்கப்பட்டுள்ளது என்றும், தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஆதாயம் அடையும் வகையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், அந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்து வருகிறது. இதனிடையே, ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் நிறுவனத்தை கூட்டாளியாக்குவதற்கு இந்திய அரசுதான் பரிந்துரைத்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்சுவா ஹொலாந்த் தெரிவித்த கருத்துகள், இந்த விவகாரத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளது. 

இந்நிலையில் ரஃபேல் ஒப்பந்தத்தில் அரசுக்கு ஏற்படும் நஷ்டத்தை முதலில் கண்டுபிடித்த அரசு அதிகாரி  புறக்கணிக்கப்பட்டார் என்றும், அதனைக் கண்டு கொள்ளாமல் அரசுக்கு சாதகமாக செயல்பட்ட உயர் அதிகாரிக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டது என்றும் காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. 

இதுதொடர்பாக ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றில் செய்திக் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

2016-ஆம் ஆண்டு செப்டம்பரில் ரஃபேல் ஒப்பந்தமானது அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மற்றும் பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சரிடையே    கையெழுத்தாகிறது. ஆனால் அதற்கு ஒரு மாதம் முன்னதாகவே, இதற்கான பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்றிருந்தவரும், பாதுகாப்புத் துறை கையகப்படுத்துதல் பிரிவின் மேலாளரான   துணைச் செயலாளர் ஒருவர், கூடுதல் விலை கொடுப்பதால் அரசுக்கு ஏற்படும் அதிக பொருளாதார இழப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக தனது எதிர்ப்பை அமைச்சரவைக் குறிப்பில் பதிவு செய்துள்ளார். 

அவரது இந்தக் குறிப்பின் காரணமாக ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாவது தாமதமானது. ஆனால் அவரது இந்த எதிர்ப்பை, பாதுகாப்புத் துறை கையகப்படுத்துதல் பிரிவின் பொது இயக்குநரான ஸ்மிதா நாகராஜ் ஒதுக்கி விட்டு ஒப்பந்தத்தினை கையெழுத்தாகும் கட்டத்திற்கு  அனுப்பியுள்ளார்.  

அதன் பின்னர் அந்தக் குறிப்பிட்ட  துணைச் செயலாளர் பாதுகாப்புத் துறையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேசமயம் பொது இயக்குநரான ஸ்மிதா நாகராஜ் தற்போது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினராகத் (யு.பி.எஸ்.சி)  தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு அந்த செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுரைக்கான இணைப்பை தன்னுடைய  ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா, 'ஊழலுக்கான தடயத்தை மூடி மறைத்தவர்களுக்கு, தன்மையாக நடந்துகொண்டதற்கான வெகுமதி கிடைத்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT