ரூ.15 லட்சம் வழங்குவதாக பாஜக வாக்குறுதி அளிக்கவில்லை: ராஜ்நாத் சிங்
ரூ.15 லட்சம் வழங்குவதாக பாஜக வாக்குறுதி அளிக்கவில்லை என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்கிழமை தெரிவித்தார்.
ரூ.15 லட்சம் வழங்குவதாக பாஜக வாக்குறுதி அளிக்கவில்லை என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு ராஜ்நாத் சிங் அளித்த பிரத்தியேகப் பேட்டியில் கூறியதாவது:
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத மையத்தின் மீதுதான் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. மேலும் அதனால் அந்நாட்டு மக்கள் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். ஏனென்றால் பயங்கரவாதத்துக்கு எதிராக மட்டுமே பாஜக அரசு நடவடிக்கை எடுத்தது, பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக அல்ல.
இந்திய எல்லையில் பாகிஸ்தான் எஃப் 16 ரக போர் விமானங்களை பயன்படுத்தி தாக்கியது உரிய சாட்சிகளின் மூலம் அம்பலமாகியுள்ளது. இதை விமானப்படைத் தளபதியும் உறுதிபடுத்தியுள்ளார். மேலும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் மீது இந்தியா நடத்திய தாக்குதலுக்கு உலக நாடுகள் எதுவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
Advertisement
நாடு முழுவதும் நடைபெறும் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனைகளுக்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர்கள் தங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதை மத்திய அரசு எவ்வாறு தடுக்க முடியும். அதுபோன்ற தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தாது.
ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, கறுப்புப் பணம் மீட்கப்படும் என வாக்குறுதி அளித்தோம். அவ்வகையில், கறுப்புப் பணம் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அனைவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என பாஜக ஒருபோதும் வாக்குறுதி அளிக்கவில்லை.
பாஜக-வின் தேர்தல் வாக்குறுதி மக்களின் பங்களிப்புடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் விமர்சனங்களை பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார்.