இந்தியா

உ.பி.: விரைவு ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன

DIN

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் அருகே விரைவு ரயிலின் 13 பெட்டிகள் சனிக்கிழமை அதிகாலை தடம்புரண்டன. இதில், 15 பயணிகள் காயமடைந்தனர்.
மேற்கு வங்க மாநிலம், ஹெளராவுக்கும் புது தில்லிக்கும் இடையே இயக்கப்படும் பூர்வா விரைவு ரயில், உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் அருகே சனிக்கிழமை அதிகாலை 12.50 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இதுதொடர்பாக வடக்கு மத்திய ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி அமித் மாள்வியா கூறியதாவது:
கான்பூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள ரூமா ரயில் நிலையம் அருகே இந்த விபத்து நேரிட்டது. தடம்புரண்ட 12 பெட்டிகளில், 4 பெட்டிகள் கவிழ்ந்துவிட்டன. இதில், 15 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் கான்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். படுகாயமடைந்த 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.5,000-ம், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.25,000-ம் உடனடி நிவாரணமாக வழங்கப்பட்டது.
விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்தவர்கள் அனைவரும் பேருந்துகள் மூலம் கான்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து இரு சிறப்பு ரயில்கள் மூலம் புது தில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக, 28 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. 16 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன என்றார் அவர். 
விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த ஒருவர் கூறுகையில், "ரயில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பலத்த சப்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து, நாங்கள் அனைவரும் இருக்கைகளில் இருந்து கீழே விழுந்துவிட்டோம்' என்றார்.
இதனிடையே, இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அரசு அதிகாரிகளுக்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்; கான்பூர் மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் உயரதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர் என்று மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ஜெயின் தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று வடக்கு மத்திய ரயில்வே பொது மேலாளர் ராஜீவ் சௌதரி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT