இந்தியா

குஜராத் கலவரம்: பில்கிஸ் பானுவுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, அரசு வேலை, வீடு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

PTI

குஜராத் கலவரத்தின்போது பில்கிஸ் பானு என்பவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்த வழக்கில், அவருக்கு ரூ.50 லட்சம்  இழப்பீடு, அரசு வேலை, தங்கும் வசதி ஆகியவற்றை செய்து கொடுக்குமாறு குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதே சமயம், இந்த வழக்கில் குற்றவாளிகளாக இருக்கும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் குஜராத் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று குஜராத் அரசுக்குப் பிறப்பித்த உத்தரவில், இந்த சம்பவத்தில் குற்றவாளிகளாக இருக்கும் காவல்துறை அதிகாரிகள் ஓய்வு பெற்றிருந்தால், அவர்களுக்கான ஓய்வூதியப் பலன்களை நிறுத்துமாறும், மும்பை உயர் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரியை பதவிக் குறைப்பு செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2002-ஆம் ஆண்டு, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் கலவரம் வெடித்தது.

அப்போது, பில்கிஸ் பானு, அவரது 2 வயது மகள் உள்பட 18 பேர் தப்பிச் சென்ற வாகனத்தை ஒரு கும்பல் வழிமறித்துத் தாக்கியது. 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவையும், அவரது உறவுக்கார பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்த அந்தக் கும்பல், பில்கிஸ் பானுவின் பெண் உள்பட அனைவரையும் படுகொலை செய்தது.

பல்கிஸ் பானுவை மட்டும் ரத்த வெள்ளத்தில் விட்டுச் சென்றது. எனினும், இந்தச் சம்பவத்தில் உயிர் பிழைத்த பில்கிஸ் பானு, இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால், அந்தப் புகாரை வாங்க போலீஸார் மறுத்தனர். மேலும், அவரை அதிகாரிகள் அச்சுறுத்தியதாகவும், மருத்துவர்கள் போலி பிரேதப் பரிசோதனை சான்றிதழ்களை அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக ஆர்வலர்களின் உதவியுடன் சிபிஐ வழக்குக்கு உத்தரவிடப்பட்டு, சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும், ஐபிஎஸ் அதிகாரி ஆர்.எஸ். போக்ரா, 2 போலீஸார், 2 மருத்துவர்கள் உள்பட 7 பேரை விசாரணை நீதிமன்றம் விடுவித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அந்த 7 பேரும் குற்றவாளிகள் என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, அவர்கள் 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT