இந்தியா

சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய முயன்றால் போராடுவோம்: ஜம்மு-காஷ்மீர் கட்சிகள் கூட்டாக தீர்மானம்

DIN

ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவுகளை ரத்து செய்யும் எந்தவொரு முயற்சியையும் எதிர்த்து போராடுவதற்கு அந்த மாநில அரசியல் கட்சிகள் கூட்டாக தீர்மானம் செய்துள்ளன.
 ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு சதித் திட்டம் தீட்டியிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, அந்த மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அரசின் அறிவுறுத்தலை ஏற்று, அமர்நாத் யாத்ரீகர்களும், சுற்றுலாப் பயணிகளும் தங்களது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வருகின்றனர்.
 இந்நிலையில், ஸ்ரீநகரில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லாவின் இல்லத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 இக்கூட்டத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல் தலைவர் ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவர் மெஹபூபா முஃப்தி, மாநில காங்கிரஸ் தலைவர் தாஜ் மொஹைதீன், மக்கள் மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த சஜத் லோன், இம்ரான் அன்சாரி, ஜம்மு-காஷ்மீர் மக்கள் இயக்கம் கட்சியின் தலைவர் ஷா ஃபசல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.ஒய்.தாரிகாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 கூட்டத்தில், மாநிலத்தின் தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பின்னர் ஃபரூக் அப்துல்லா கூறினார். அவர் கூறியதாவது:
 ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த அனைத்துக் கட்சிக் குழு அடுத்த சில தினங்களில் தில்லி சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப் பிரிவுகளை ரத்து செய்தாலோ, தொகுதிகளை மறுவரையறை செய்தாலோ அல்லது மாநிலத்தை பிரித்தாலோ ஏற்படும் பின்விளைவுகள் குறித்து அவர்களிடம் அனைத்துக் கட்சிக் குழு எடுத்துரைக்கவுள்ளது.
 ஜம்மு-காஷ்மீரில் பதற்றத்தை ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் இந்தியாவும், பாகிஸ்தானும் மேற்கொள்ளக் கூடாது என்று அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த நேரத்தில், ஜம்மு-காஷ்மீர் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன என்றார் அவர்.
 முன்னதாக, மெஹபூபா முஃப்தியின் இல்லத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர், ஃபரூக் அப்துல்லாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவரது இல்லத்தில் கூட்டம் நடத்தப்பட்டது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT