இந்தியா

கேரள விவசாயிகளுக்கு சலுகைகள்: ரிசர்வ் வங்கிக்கு ராகுல் கோரிக்கை

DIN

கேரள விவசாயிகள் பயிர்க் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலஅவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு வயநாடு எம்.பி. ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
கேரளத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தினால் பயிர்களும் கடும் சேதமடைந்துள்ளன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள 1,100க்கும் மேற்பட்ட நிவாரண மையங்களில் 1.90 லட்சம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வயநாடு தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ராகுல் காந்தி அண்மையில் பார்வையிட்டார். வெள்ள பாதிப்பு குறித்து பலதரப்பினரிடமும் அவர் கருத்துகளைக் கேட்டறிந்தார். இதையடுத்து, ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு ராகுல் காந்தி புதன்கிழமை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
கடந்த நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு கேரளத்தில் கனமழை பெய்து, வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாநிலத்திலுள்ள விவசாயிகளின் பயிர்களும், அவர்களது உடைமைகளும் பெரும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. இதனால், விவசாயிகளால் பயிர்க் கடன்களை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கரும்பு, பருத்தி உள்ளிட்ட பணப் பயிர்களின் விலை குறைந்துள்ளது உள்ளிட்ட மற்ற காரணிகளும் விவசாயிகளைப் பாதித்துள்ளன. இந்நிலையில், பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த வங்கிகள் விவசாயிகளை வற்புறுத்துவது அபத்தமாக இருக்கும். எனவே, விவசாயிகள் பயிர்க் கடனைச் செலுத்துவதற்கான காலஅவகாசத்தை டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கும் நடவடிக்கைகளை ஆர்பிஐ மேற்கொள்ள வேண்டும் என்று அக்கடிதத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT