இந்தியா

நிலவை நோக்கிய நகர்வை வெற்றிகரமாகத் தொடங்கியது சந்திரயான்-2: நிலவின் சுற்றுவட்டப் பாதையை ஆக. 20-இல் சென்றடையும்

DIN


புவி சுற்றுவட்டப் பாதையில் கடந்த 23 நாள்களாக சுற்றி வந்துகொண்டிருந்த சந்திரயான்-2 விண்கலம், நிலவை நோக்கிய தனது பயணத்தை புதன்கிழமை அதிகாலை தொடங்கியது.
விண்கலத்தில் இடம்பெற்றுள்ள திரவ என்ஜினை இஸ்ரோ விஞ்ஞானிகள் தரைக் கட்டுப்பாட்டு அறையிலிருந்தபடி வெற்றிகரமாக  இயக்கி புவி சுற்றுப் பாதையிலிருந்து விண்கலத்தை விலக்கி வெற்றிகரமாக நிலவை நோக்கி நகர வைத்துள்ளனர். தொடர்ந்து 5 நாள்கள் நிலவை நோக்கிய பயணத்தைத் தொடர உள்ள விண்கலம், 6-ஆவது நாளில் நிலவின் சுற்றுவட்டப் பாதையைச் சென்றடைய உள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் இந்தியாவின் அதிக திறன்கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. புவி சுற்றுவட்டப் பாதையில் வலம் வந்துகொண்டிருந்த விண்கலம், ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை 5 முறை படிப்படியாக நிலை உயர்த்தப்பட்டது. விண்கலம் தொடர்ந்து புவி சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவந்த நிலையில், இறுதிக்கட்ட நிலை உயர்வையும், நிலவை நோக்கிய நகர்வையும் விஞ்ஞானிகள் புதன்கிழமை வெற்றிகரமாக நிகழ்த்தினர்.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு:
சந்திரயான்-2 விண்கலத்தில் இடம்பெற்றிருக்கும் திரவ எரிபொருளில் இயங்கக்கூடிய என்ஜின், புதன்கிழமை அதிகாலை 2.21 மணியளவில் 20.05 நிமிடங்கள் இயக்கப்பட்டு, புவியின் சுற்றுவட்டப் பாதையில் இறுதிக்கட்ட நிலை உயர்வுக்கு வெற்றிகரமாக நகர்த்தப்பட்டது. இதன் மூலம், விண்கலம்  நிலவை நோக்கிய தனது நகர்வையும் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.
விண்கலத்தின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதன் அனைத்து செயல்பாடுகளும் இதுவரை சிறப்பாக உள்ளன.

நிலவின் சுற்றுவட்டப் பாதையில்...: நிலவை நோக்கி தொடர்ந்து பயணிக்கும் விண்கலம், ஆகஸ்ட் 20-ஆம் தேதி நிலவைச் சென்றடையும். அன்றைய தினம் விண்கலத்தில் உள்ள திரவ என்ஜின் பற்ற வைக்கப்பட்டு நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைக்கப்படும். அதன் மூலம் நிலவின் பரப்பிலிருந்து குறைந்தபட்சம் 118 கி.மீ. தொலைவையும், அதிகபட்சம் 18,078 கி.மீ. தொலைவையும் கொண்ட நீள்வட்டப் பாதையில் விண்கலம் சுற்றி வரும்.
அதைத் தொடர்ந்து, நிலவின் சுற்றுவட்டப் பாதையிலேயே வலம் வரும் விண்கலம் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை படிப்படியாக 4 முறை சுற்றுவட்டப் பாதை அளவு குறைக்கப்பட்டு இறுதியாக நிலவின் பரப்பிலிருந்து 100 கி.மீ. தொலைவிலான சுற்றுப் பாதையில் சுற்றி வரும் வகையில் விண்கலம் நிறுத்தப்படும்.
பின்னர் செப்டம்பர் 2-ஆம் தேதி விண்கலம் ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் (விக்ரம்) பிரிக்கப்படும். அவ்வாறு பிரிக்கப்படும் லேண்டர் அமைப்பு தொடர்ந்து 4 நாள்கள் நிலவைச் சுற்றி வரும். அப்போது இரண்டு முறை அதன் சுற்றுவட்டப் பாதை அளவு குறைக்கப்பட்டு, இறுதியாக செப்டம்பர் 7-ஆம் தேதியன்று நிலவின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறக்கப்படும் என இஸ்ரோ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், ஆர்பிட்டர் என்ற அமைப்பு ஓராண்டுக்கு நிலவை சுற்றி வந்தபடியும், லேண்டர் அமைப்பு நிலவில் தரையிறங்கி, இறங்கிய இடத்தில் இருந்தபடியே 14 நாள்களுக்கும், லேண்டர் அமைப்பிலிருந்து வெளிவரும் ரோவர் என்ற 6 சக்கரங்களைக் கொண்ட வாகனம் நிலவின் தரைப் பரப்பில் 14 நாள்கள் 500 மீட்டர் வரை நகர்ந்து சென்றும் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பயன் என்ன?: நிலவில் சந்திரயான்-1 விண்கலம் கண்டறிந்தவற்றிலிருந்து, அடுத்தகட்ட ஆய்வை மேற்கொள்வதற்காக, சந்திரயான்-2 விண்கலம் அனுப்பப்பட்டிருக்கிறது. இதுவரை எந்தவொரு நாட்டின் விண்கலமும் சென்றிராத, நிலவின் தென் துருவத்தில் முதன் முறையாக தரையிறங்கி ஆய்வை மேற்கொள்ள உள்ளது. 
நிலவின் தென் துருவத்திலும் தண்ணீர் மற்றும் பிற கனிமங்கள் இருப்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படுவதோடு, சூரிய குடும்பத்தின் வரலாறு குறித்து புரிந்துகொள்வதற்கான தகவல்களைப் பெறுவதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
நிலவில் மனிதர்கள் குடியேறுவதற்கு சாத்தியமான இடங்களில் ஒன்றாக தென்துருவம் கருதப்படுகிறது. இதற்கான சாத்தியக்கூறுகளையும் இந்த ஆய்வு நமக்குத் தர உள்ளது. அதன் மூலம், நிலவில் மனிதன் வாழ முடியுமா என்பது குறித்து உலகம் முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு இந்த சந்திரயான் 2 திட்டம் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

திட்டமிட்டபடி இயங்கி வருகிறது
திட்டமிட்டபடி நிலவை நோக்கிய நகர்வை சந்திரயான்-2 விண்கலம் தொடங்கியிருப்பது, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.  
இதுகுறித்து அவர் தினமணிக்கு தொலைபேசி மூலம் அளித்த பேட்டி:
சந்திரயான்-2 விண்கலத்தின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. திட்டமிட்டபடி விண்கலத்தை புதன்கிழமை நிலவை நோக்கி நகர்த்தியிருப்பது, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. தொடர்ந்து 5 நாள்கள் நிலவை நோக்கிய நகர்வை மேற்கொள்ளும் விண்கலம், நிலவின் சுற்றுப் பாதையை ஆகஸ்ட் 20-ஆம் தேதி சென்றடையும்.

நிலவைப் படம் பிடித்து அனுப்புவது எப்போது?: விண்கலம் நிலவை சென்றடைந்ததும், முதலில் அதன் சுற்றுவட்டப் பாதையில் நுழைக்கப்படும். அதன் பின்னர் சீராக செயல்படுகிறதா என்பது கண்காணிக்கப்படும். 
அவ்வாறு நிலவின் சுற்றுவட்டப் பாதையில் விண்கலத்தை சீரான செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு ஒன்றிரண்டு நாள்கள் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது.
அதன் பிறகே, விண்கலத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா, நிலவை நோக்கி நகர்த்தப்பட்டு படம் பிடிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். அவ்வாறு எடுக்கப்படும் நிலவின் தெளிவான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்கும் வெளியிடப்படும் என்றார் சிவன். 
விண்ணில் செலுத்தப்பட்டு புவி சுற்றுப் பாதையில் சுற்றி வந்துகொண்டிருந்த சந்திரயான்-2, ஆகஸ்ட் 3-ஆம் தேதியன்று பூமியை மிக அழகாகவும், தெளிவாகவும் படம்பிடித்து அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT