இந்தியா

ம.பி.யில் கண்புரை அறுவைச் சிகிச்சை செய்த 11 பேருக்கு பார்வை பறிபோனது?

DIN

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கண்புரை அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட 11 பேருக்கு பாக்டீரியா தொற்று காரணமாக கண்பார்வை பறிபோயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 
இதுதொடர்பாக இந்தூர் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அலுவலர் பிரவீண் ஜாடியா கூறியதாவது: 
இந்தூரில் உள்ள நேத்ரா சிகித்சாலய் மருத்துவமனையில் கடந்த 8-ஆம் தேதி, பார்வை குறைபாட்டை போக்குவதற்கான அரசு திட்டத்தின் கீழ் 13 பேர் கண்புரை அறுவைச் சிகிச்சை செய்துகொண்டனர். அவர்களில் 11 பேருக்கு பார்வை மங்கலாகத் தெரிகிறது. பாக்டீரியா தொற்று காரணமாக பார்வைக் குறைபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் 45 முதல் 85 வயதுக்கு உள்பட்டவர்களாவர். 
இதையடுத்து, அவர்கள் சிகிச்சை பெற்ற நேத்ரா சிகித்சாலய் மருத்துவமனையின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக ஒரு மாதத்துக்குள்ளாக விளக்கமளிக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டும் இந்த மருத்துவமனையில் 18 பேர் கண்புரை அறுவைச் சிகிச்சை செய்துகொண்டபோது இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
தற்போது பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் மற்றொரு கண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை சங்கரா நேத்ராலயாவைச் சேர்ந்த ராஜீவ் ராமன் உள்பட இரு மருத்துவ நிபுணர்கள் இங்கு வரவழைக்கப்படவுள்ளனர் என்று பிரவீண் ஜாடியா கூறினார். 
"துரதிருஷ்டவசமானது': இச்சம்பவம் தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், "11 பேர் பார்வை இழந்ததாக அஞ்சப்படும் சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. சம்பந்தப்பட்ட மருத்துவமனை ஏற்கெனவே இதுபோன்ற தவறைச் செய்துள்ள நிலையில், மீண்டும் அந்த மருத்துவமனை இயங்க எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது? 
விசாரணைக்குப் பிறகு, சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீதும், மருத்துவமனை நிர்வாகம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சையும், ரூ.50,000 நிதியுதவியும் வழங்கப்படும்' என்று கூறியுள்ளார். 
சம்பவம் தொடர்பாக விசாரிக்க இந்தூர் கோட்ட ஆணையர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் துளசிராம் சிலாவத் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT