இந்தியா

தேசிய மகளிர் ஆணையத்தை வலுப்படுத்தும் திட்டத்தை கைவிடுகிறதா மோடி அரசு?

Muthumari


பெண்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக கடந்த 1992ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி தேசிய மகளிர் ஆணையம் கொண்டு வரப்பட்டது. பெண்களின் உரிமைகள் அனைத்தும் கிடைக்க வழிவகை செய்வது, அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டால் அதற்கு தீர்வு காண உதவுவது, பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தட்டிக்கேட்பதுடன், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கச் செய்வது உள்ளிட்டவை தேசிய மகளிர் ஆணையத்தின் முக்கியப் பணிகளாகக் கருதப்படுகிறது. 

பெண்களுக்கு கொடுமைகள் இழைக்கப்படும் போது, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதோடு, சட்ட ரீதியாக அவர்கள் அணுக வேண்டிய ஆதரவுகளையும் அளிக்கிறது. பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டங்களை முழுமையாக ஆய்வு செய்வதுடன், ஏதேனும் குறை இருந்தால் அதனை அரசுக்கு சுட்டிக்காட்டி, திருத்தம் செய்ய பரிந்துரைக்கிறது. நாடு முழுவதும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தாமாக முன்வந்து கேள்வி கேட்கும் ஓர் அமைப்பு தேசிய மகளிர் ஆணையம் ஆகும். 

தற்போது இணையம் மக்களை ஆக்ரமித்துள்ள நிலையில், பெண்கள் மத்தியில் இணையதள பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய மகளிர் ஆணையம் 'டிஜிட்டல் சக்தி' என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. 

கடந்த முறை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்த மேனகா காந்தி, தேசிய மகளிர் ஆணையத்தை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். கடந்த 2014 மற்றும் 2015ம் ஆண்டு இது தொடர்பாக நடைபெற்றக் கூட்டத்தில் தேசிய மகளிர் ஆணையத்திற்கென சில அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார். 

அதாவது, பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு உடனடி தீர்வு காண்பது, வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்கள் ஆஜராகவில்லை எனில் அவர்களை கைது செய்ய சிவில் நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்குதல் உள்ளிட்டவற்றை முன்மொழிந்தது. மேலும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அரசு வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் பட்சத்தில், தேசிய மகளிர் ஆணையம் மறுசீரமைப்பு செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது. 

ஆனால், தற்போதைய சூழ்நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தை வலுப்படுத்தும் நோக்கமில்லை என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ஆணையத்தை மறுசீரமைப்பு செய்வது தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தேசிய மகளிர் ஆணையத்திற்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும் போது, அது மத்திய அரசிற்கும், மாநிலங்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் என்று அரசு காரணம் தெரிவிப்பதாகக் கூறினார். 

மேலும், 'பெண்களுக்கு எதிராக நடக்கும் நடவடிக்கைகள் குறித்து அனைத்துவிதமான புகார்களையும் ஆணையம் பெற்று வருகிறது. இந்த புகார்களை விசாரிப்பது மற்றும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைப்பது தவிர ஆணையத்திற்கு வேறு எந்த அதிகாரங்களும் இல்லை. ஆனால், இந்த புகார்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கவேண்டுமெனில் சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்படுவது அவசியம்' என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT