இந்தியா

காஷ்மீரில் கடுமையான நிர்வாகம் இருப்பதை அறிந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர்கள்

DIN

ஜம்மு-காஷ்மீரில் கடுமையான நிர்வாகம் இருப்பதையும், அங்குள்ள மக்கள் முரட்டுத்தனமான பாதுகாப்பு மூலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதையும் எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் அறிந்துகொண்டன என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
 ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அங்கு நிலவும் சூழல் குறித்து ஆய்வு செய்வதற்காக ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் 11 பேர் அடங்கிய குழு அந்த மாநிலத்துக்கு சனிக்கிழமை சென்றது. எனினும், மாநில அரசு நிர்வாகம் அவர்களை ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி தில்லிக்கு திருப்பி அனுப்பியது.
 இந்நிலையில், இதுதொடர்பாக ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "காஷ்மீர் மக்கள் சுதந்திரமாக நடமாடி 20 நாள்கள் ஆகிறது. அவர்களது அடிப்படைச் சுதந்திரம் கூட கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீநகருக்கு சனிக்கிழமை சென்றபோது, அந்த மாநிலத்தில் இருக்கும் கடுமையான அரசு நிர்வாகம் குறித்தும், முரட்டு பாதுகாப்பு மூலம் அங்குள்ள மக்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறித்தும் எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் அறிந்துகொண்டோம்' என்று கூறியிருந்தார்.
 அத்துடன், ஸ்ரீநகருக்கு சனிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு சென்றது தொடர்பான காணொலி ஒன்றையும் அவர் பதிவிட்டிருந்தார். அதன்படி, மாநிலத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது தொடர்பான உத்தரவை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அரசு அதிகாரிகள் படித்துக் காட்டினர்.
 அதையடுத்து ராகுல் காந்தி ஊடகத்தினரிடையே உரையாற்றினார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர்கள் குழுவுடன் வந்த ஊடகத்தினரிடம் காவல்துறையினர் முறை தவறி நடந்துகொண்டதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை இல்லை என்பது தெளிவாகத் தெரிவதாக அவர் கூறினார்.
 முன்னதாக ராகுல் காந்தியுடன், குலாம் நபி ஆஸாத், ஆனந்த் சர்மா, கே.சி. வேணுகோபால் (காங்கிரஸ்), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), திருச்சி சிவா (திமுக), சரத் யாதவ் (லோக்தந்த்ரிக் ஜனதா தளம்), தினேஷ் திரிவேதி (திரிணமூல் காங்கிரஸ்), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), மஜீத் மேமன் (தேசியவாத காங்கிரஸ்), மனோஜ் ஜா (ராஷ்ட்ரீய ஜனதா தளம்), குபேந்திர ரெட்டி (மதச்சார்பற்ற ஜனதா தளம்) ஆகியோர் ஸ்ரீநகர் சென்றிருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT