இந்தியா

சபரிமலை விவகாரம்: கேரள அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை

DIN


சபரிமலையில் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வதற்கு அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் நிலைப்பாட்டில் எந்த மாற்றமுமில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
இதுகுறித்து திருவனந்தபுரத்தில் அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
சபரிமலை விவகாரத்தில் மாநில அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்பதே மாநில அரசின் நிலைப்பாடு.
மக்களவைத் தேர்தலின் முடிவுகள் சட்டப் பேரவை இடைத்தேர்தலில் பிரதிபலிக்காது. சபரிமலை விவகாரத்தை மட்டும் பாஜக எப்போதும் முன்னிலைப் படுத்துகிறது. இது எங்களை பாதிக்காது.
மாறாக, சபரிமலை விவகாரத்தில் அவசரச் சட்டம் இயற்றப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. அவர்களுடைய பொய் வாக்குறுதியை மக்கள் நம்பினர். ஆனால், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக சட்டம் இயற்ற முடியாது என்று மத்திய அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர். பாஜக மூத்த தலைவர்களும் இதையே தெரிவித்தனர். இறுதியில், அவர்களுடைய வார்த்தைகளை நம்பியவர்கள்தான் ஏமாற்றமடைந்தனர் என்றார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி சபரிமலை கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
சபரிமலையில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கேரளத்தில் ஆளும் இடதுசாரி முன்னணி அரசு அமல்படுத்த முயன்றது. அரசின் முடிவு, கேரளத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாநிலத்தில்  பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஏராளமான ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
இந்த ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி, கேரளத்தைச் சேர்ந்த 50 வயதுக்கும் குறைவான பெண்கள் 2 பேர் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை கோயிலுக்குள் நுழைந்ததை அடுத்து, மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. சில இடங்களில் வன்முறையும் ஏற்பட்டது.
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், கேரளத்தின் 20 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. மீதியுள்ள 19 இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில், பாலா சட்டப் பேரவைக்கு அடுத்த மாதம் 23-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. சபரிமலையில் பெண்கள் பிரவேசம், தேர்தல் களத்தில் மீண்டும் முக்கிய விஷயமாக இடம்பெறும் எனக் கருதப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

SCROLL FOR NEXT