இந்தியா

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவன ஹெலிகாப்டர் ஊழல்: இடைத்தரகர் ராஜீவ் சக்சேனாவுக்கு 4 நாட்கள் நீதிமன்றக் காவல் 

DIN

புதுதில்லி: இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர் வாங்குவதில் நடந்த  ஊழல் தொடர்பாக, கைது செய்யப்பட்ட இடைத்தரகர் ராஜீவ் சக்சேனாவுக்கு,நான்கு நாட்களுக்கு நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் 2010-ம் ஆண்டு, இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.

இதில் ரூ.362 கோடி லஞ்சப் பணம் இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக எழுந்த குற்றச்சாட்டை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதில் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்பி தியாகி, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் மற்றும் பின் மெக்கானிகா நிறுவன இயக்குநர்கள் கியுசெப்பே ஓர்சி, புர்னோ ஸ்பாக்னோலினி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சட்டவிரோதமான வழியில் வெளிநாட்டு பணம் இந்தியாவுக்கு வந்துள்ளதாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் அமலாக்கத்துறை கடந்த 18-7-2018 அன்று தில்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என மொத்தம் 34 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.  இடைத்தரகர்களாக செயல்பட்ட வெளிநாட்டினர் கிறிஸ்டியன் மைக்கேல், கார்லோ ஜெரோசா, கைடோ ஹாஷ்கே, துபாய் வாழ் இந்தியர் ராஜீவ் சக்சேனா ஆகியோருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இவர்களில் கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த மற்றொரு இடைத்தரகரான ராஜீவ் சக்சேனா கடந்த 31-1-2019 அன்று துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டார். அவரிடம் மூன்று நாட்களாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.கடந்த 04.02.19 ஆண்டு பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவருக்கு, 12-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இடைத்தரகர் ராஜீவ் சக்சேனாவுக்கு,நான்கு நாட்களுக்கு நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நான்கு நாட்கள் விசாரணை காவல் முடிந்து தில்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் செவ்வாயன்று  ராஜீவ் சக்சேனா ஆஜர்படுத்தப்பட்டார்.  அப்போது அமலாக்கத்துறை தரப்பில் காவல் நீட்டிப்பு எதுவும் கேட்கப்படவில்லை.

இதையடுத்து சக்சேனாவை 18-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவரது சமீபத்திய மருத்துவ பரிசோதனை அறிக்கையை எய்ம்ஸ் மருத்துவமனை புதனனன்று தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

சக்சேனாவின் ஜாமின் மனுவை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்றும், அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என்றும் சக்சேனாவின் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதையடுத்து, நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT