இந்தியா

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி சந்திரபாபு நாயுடு தில்லியில் பேரணி: குடியரசுத் தலைவரிடம் மனு

DIN


ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி அந்த மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தில்லியில் பேரணி நடத்தினார். மேலும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து மனுவும் அளித்தார். 
ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி அவர் தில்லியில் திங்கள்கிழமை ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார். அதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தில்லி முதல்வர் கேஜரிவால் உள்பட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பலர் நேரில் ஆதரவு தெரிவித்தனர். 
இந்நிலையில், அதே கோரிக்கையை வலியுறுத்தி ஆந்திர பவனில் இருந்து ஜந்தர் மந்தர் வரை செவ்வாய்க்கிழமை சந்திரபாபு நாயுடு பேரணியாகச் சென்றார். இதில் தெலுங்கு தேசம் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து 18 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். 
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: கடந்த தேர்தலில் ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்தார். ஆனால், தனது வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. ஆந்திரம் தொடர்பாக அவர் கவனம் செலுத்தாமல் உள்ளதுடன், ஆந்திர மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் நடந்து கொள்கிறார். அரசு அமைப்புகளை ஏவிவிட்டு ஆந்திர அரசை அடிபணிய வைக்க மோடி முயற்சி செய்கிறார். அது ஒரு போதும் பலிக்காது. தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்கும் வாய்ப்புள்ளது என்றார் அவர்.
பாஜக பதிலடி: சந்திரபாபு நாயுடுவின் மிரட்டல்களுக்கு அடிபணிய மாட்டோம் என்று பாஜக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரஜீவ் பிரதாப் ரூடி கூறுகையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிராக நடக்கும் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு ஆகியோரின் மிரட்டல்களுக்கு பாஜக அடிபணியாது. சந்திரபாபு நாயுடுவுக்கு தில்லியில் இடமில்லை என்றார்.
போராட்டத்துக்கு ரூ.10 கோடி அரசு பணம்
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தில்லியில் மேற்கொண்ட இருநாள் போராட்டத்துக்கு ரூ.10 கோடி அரசுப் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு ரூ.10 கோடி பணத்தை ஒதுக்கி கடந்த பிப்ரவரி 6- ஆம் தேதி ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தப் பேரணியில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீகாகுளம், அனந்தப்பூர் ஆகிய இடங்களில் இருந்து 2 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. ரயில்வேயிடம் இருந்து இந்த 2 ரயில்களும் வாடகைக்குப் பெறப்பட்டுள்ளன. இதற்கு ரூ.1.12 கோடி கட்டணமாகச் செலுத்தப்பட்டுள்ளது.
 இது தொடர்பாக ஆந்திர அரசு அதிகாரிகள் கூறுகையில் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்பியவர்கள் ஆந்திர அரசு சார்பில் பிரத்யேக ரயிலில் அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களுக்காக தில்லியில் ஹோட்டல்களில் 1,100 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன.  மேலும், அவர்களுக்கான போக்குவரத்து வசதிகள், உணவு குடிநீர் வசதிகளும் ஆந்திர அரசு சார்பில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. இந்த வகையில் மொத்தம் ரூ.10 கோடி செலவாகியுள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT