இந்தியா

ராணுவம், மத்திய அரசுடன் எதிர்க்கட்சிகள் துணை நிற்கும்: ராகுல் காந்தி

DIN


காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல், இந்தியாவின் ஆன்மாவின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். இந்த விஷயத்தில் நமது ராணுவத்துடனும், மத்திய அரசுடனும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் துணை நிற்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி இது தொடர்பாக கூறியதாவது:
காஷ்மீரில் நிகழ்ந்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் மிகப்பெரிய சோக நிகழ்வாகும். இது நமது வீரர்களுக்கு எதிராக நடந்துள்ள மிகப்பெரிய வன்முறை. இந்தியாவை எப்படியாவது பிளவுபடுத்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில் பயங்கரவாதிகள் இதுபோன்ற தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றனர். ஆனால், அவர்கள் எவ்வளவு முயன்றாலும் தீய எண்ணங்கள் நிறைவேறாது.
இந்தியாவின் ஆன்மாவின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த விஷயத்தில் நமது ராணுவத்துடனும், மத்திய அரசுடனும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் துணை நிற்கும். இதுபோன்ற பயங்கரவாதத் தாக்குதலை இந்திய தேசம் ஒருபோதும் மறந்துவிடாது என்பதை தாக்குதல் நிகழ்த்தியவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்திய ராணுவம் மிகவும் சுதந்திரமாக நடவடிக்கை எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, இது மிகவும் சோகமான தருணம்; வீரமரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நேரம். நமது அன்புக்குரிய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களது குடும்பத்தினர் மிகப்பெரிய சோகத்தில் உள்ளனர். இந்த நேரத்தில் அவர்களுக்கு நாம் துணை நிற்போம் என்பதைத் தவிர வேறு எதையும் கூற விரும்பவில்லை.
பயங்கரவாதத்துக்கு எதிராக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் துணை நிற்கும். ஏனெனில், நாடு இப்போது மிகவும் கடினமான சூழ்நிலை எதிர்கொண்டுள்ளது என்றார் ராகுல் காந்தி.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆஸாத், ஏ.கே. அந்தோணி ஆகியோரும் ராகுலுடன் இருந்தனர். தாக்குதல் சம்பவம் குறித்து மன்மோகன் சிங் கூறுகையில், இந்த தாக்குதலை காங்கிரஸ் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பத்துக்கு உரிய உதவிகள் அளிக்கப்பட வேண்டும். காயமடைந்த வீரர்களுக்கு உரிய சிகிச்சையும், அவர்களை நம்பியுள்ள குடும்பத்தினருக்கு வேண்டிய நிவாரணமும் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிராக இந்தியா ஒருபோதும் பணிந்துபோகாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT