ஸ்ரீநகர் - முஸாஃபராபாத் பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்
புல்வாமா தாக்குதலையடுத்து, கடந்த வாரம் நிறுத்தப்பட்டிருந்த ஸ்ரீநகர் (ஜம்மு காஷ்மீர்) - முஸாஃபராபாத் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) இடையிலான பேருந்து சேவை திங்கள்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது.
புல்வாமா தாக்குதலையடுத்து, கடந்த வாரம் நிறுத்தப்பட்டிருந்த ஸ்ரீநகர் (ஜம்மு காஷ்மீர்) - முஸாஃபராபாத் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) இடையிலான பேருந்து சேவை திங்கள்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது.
ஸ்ரீநகர்-முஸாஃபராபாத் இடையே அமைதிக்கான வாகனம் என்ற பெயரில் வாராந்திர பேருந்து இயக்கப்படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே நம்பிக்கையை கட்டமைக்கும் வகையில் கடந்த 2005-இல் இந்த சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், பாகிஸ்தானின் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி கடந்த 14-ஆம் தேதி நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, கடந்த வாரம் திங்கள்கிழமை ஸ்ரீநகர்-முஸாஃபராபாத் பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் அந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்ரீநகரிலிருந்து 13 பயணிகளுடன் முஸாஃபராபாத்துக்கு பேருந்து புறப்பட்டு சென்றது. அதில் பயணித்தவர்கள் அனைவரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.