இந்தியா

பாஜகவுக்கு எதிராக ஊழல் கட்சிகளின் கூட்டணி

DIN

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமைக்கும் மகா கூட்டணி ஊழல் கட்சிகளின் கூட்டணி; அவர்களிடம் நேர்மறையான சிந்தனையோ, நல்லெண்ணமோ கிடையாது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் இணைந்து பண பலத்தைப் பயன்படுத்தி பாஜகவை வீழ்த்திவிடலாம் என்று திட்டமிடுகின்றனர். ஆனால், பாஜகவிடம் மக்கள் சக்தி உள்ளது என்றும் பிரதமர் கூறியுள்ளார். கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகள் இணைந்து சனிக்கிழமை நடத்திய மாநாட்டை அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிரம் மற்றும் தெற்கு கோவா மாநில பாஜக தொண்டர்களிடம் பிரதமர் மோடி  காணொலி காட்சி (விடியோ கான்பரன்சிங்) முறையில் ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது:
இந்தியாவில் வாழும் 125 கோடி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பாஜக செயல்பட்டு வருகிறது. ஆனால், கொல்கத்தாவில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற எதிர்க்கட்சியினர் அனைவரும் தங்கள் மகன், மகள், பேரன், பேத்தி என வாரிசுகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டவர்கள். தங்கள் வாரிசுகள் அரசியலில் தலையெடுத்து இந்த நாட்டை தாங்கள் மட்டுமே தொடர்ந்து ஆள வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களை எப்படி மக்கள் ஏற்பார்கள்?
அந்த மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் பலர் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக மீண்டும் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும் என்று பேசியுள்ளனர். அப்போதுதான் தேர்தலில் முறைகேடு செய்து அவர்கள் வெற்றி பெற முடியும் என்பதே அவர்களது நோக்கம்.
பாஜகவுக்கு எதிராக அணி திரண்டுள்ள கட்சிகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக கவனித்துப் பாருங்கள். அவை அனைத்துமே ஊழல் கட்சிகள். மகா கூட்டணி என்பது முழுக்க முழுக்க ஊழல் கூட்டணிதான். அவர்களிடம் நேர்மறையான சிந்தனையோ, நாட்டு மக்கள் மீது அக்கறையோ கிடையாது. பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற தீய எண்ணம்தான் அவர்களை இப்படி கைகோக்கவைத்துள்ளது. மற்றபடி அவர்களிடம் எந்த ஒற்றுமையும், நாட்டு நலன் குறித்த சிந்தனைகளும் கிடையாது.
அதே நேரத்தில் விவசாயிகள், கிராமப்புற இளைஞர்கள், சிறு தொழில்முனைவோர் என அனைத்து தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பாஜக அரசு பணியாற்றி வருகிறது. பொதுப் பிரிவினரில் பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களுக்கு மத்திய அரசு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்துள்ளதால் எதிர்க்கட்சியினர் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். அந்த முடிவுக்கு எதிராக பல்வேறு வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இதன் மூலம் மத்திய அரசு சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது என்பது தெரிகிறது.
மத்திய அரசின் இந்த இடஒதுக்கீட்டால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. கல்வி நிலையங்களில் தேவைக்கு ஏற்ப இடங்கள் அதிகரிக்கப்பட்டு அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கப்படும். சமூகத்தில் எந்தப் பிரிவினரும் பாதிக்கப்படக் கூடாது என்பதுதான் அரசின் நோக்கம்.
10 சதவீத இடஒதுக்கீட்டை தேர்தலில் மனதில் கொண்டு மேற்கொண்டதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர். நமது நாட்டில் எப்போதுதான் தேர்தல் நடைபெறாமல் இருக்கிறது. இதையே நாங்கள் 3 மாதங்களுக்கு முன்பு செய்திருந்தால், 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்காக இடஒதுக்கீடு அளித்ததாக இதே எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி இருப்பார்கள். 
அரசு எதைச் செய்தாலும் விமர்சிக்க வேண்டும் என்பதே அவர்களின் கொள்கை. ஆனால் மக்கள் நலனும், நாட்டின் முன்னேற்றமுமே நமது கொள்கை. நாம் அதில் தொடர்ந்து முனைப்புடன் பணியாற்றுவோம் 
என்றார் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

SCROLL FOR NEXT