இந்தியா

கர்நாடக அரசியல் சூழல் அவசரநிலையைவிட மோசமானது: எச்.டி.தேவெ கெளடா

DIN


கர்நாடகத்தின் தற்போதைய அரசியல் சூழல் அவசரநிலையைவிட மோசமானதாக உள்ளது என மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கெளடா தெரிவித்தார்.
கர்நாடகத்தில் மஜதகாங்கிரஸ் கூட்டணி அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டி, பெங்களூரு மின்ஸ்க் சதுக்கத்தில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவதற்காக சென்ற முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா, முன்னாள் முதல்வர் சித்தராமையா, அகிய இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், முன்னாள் மத்திய அமைச்சர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர்  தடுத்து நிறுத்தப்பட்டனர். போலீஸார் அனுமதி அளிக்காததால், சாலையில் அமர்ந்து அனைவரும் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
முன்னதாக, முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
தற்போதைய அரசியல் சூழ்நிலை, அவசரநிலையைவிட மோசமானதாக உள்ளது. மும்பையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கியுள்ள நட்சத்திர விடுதிக்குள் செல்ல காங்கிரஸ் அமைச்சர் டி.கே.சிவகுமாரை போலீஸார் அனுமதிக்கவில்லை. 
அந்த நட்சத்திர விடுதியில் தங்குவதற்கு ஏற்கெனவே அறை முன்பதிவு செய்திருந்தும் அவரை உள்ளே விடாமல் தடுத்துள்ளனர். எனது 60 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இதுபோன்ற சம்பவத்தை நான் கண்டதில்லை. எல்லா அரசியல் கட்சிகளும் தங்கள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற ஒன்றிணைய வேண்டும் என்றார்.
அப்போது உடனிருந்த முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியதாவது: 
மஜதகாங்கிரஸ் கூட்டணி அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சித்து வருகிறது. இதை உடனடியாக நிறுத்தாவிட்டால், கர்நாடகத்தில் பாஜக தலைவர்கள் எங்கு சென்றாலும், காங்கிரஸ், மஜத தொண்டர்கள் போராட்டம் நடத்துவார்கள். கர்நாடகத்தில் பாஜக தலைவர்கள் நடமாட முடியாத நிலையை உருவாக்குவோம். மக்களைச் சந்திக்கக்கூட வர முடியாத அளவுக்கு போராட்டத்தைத் தீவிரமாக்குவோம். 
பணம் மற்றும் அதிகாரத்துக்காக எம்எல்ஏக்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். பாஜகவின் ஆசை வார்த்தைகளுக்கு இணங்க வேண்டாம் என்று மும்பையில் தங்கியுள்ள எம்எல்ஏக்களைக் கேட்டுக் கொள்கிறோம். மும்பையில் இருந்து திரும்பி, தங்கள் ராஜிநாமாவை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற வேண்டும். மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளியுங்கள். இல்லாவிட்டால் பாஜகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார்.
முன்னதாக, பேரவைத் தலைவர் ரமேஷ்குமாரைச் சந்தித்த முன்னாள் முதல்வர் சித்தராமையா, அதிருப்தி எம்எல்ஏக்களை பதவிநீக்கம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT