இந்தியா

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

DIN


 நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நோயாளி ஒருவர் கடந்த 10-ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததற்கு மருத்துவர்களின் கவனக்குறைவுதான் காரணம் என்று கூறி பயிற்சி மருத்துவர் உள்பட 2 பேரை நோயாளியின் உறவினர்கள் கடுமையாகத் தாக்கினர். இதில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்றொருவர் லேசான காயங்களுடன் தப்பினார். 
அதையடுத்து, மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி, அந்த மாநிலத்தில் இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்துக்கு நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
அதையடுத்து, அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டதை எதிர்த்து நடைபெற்று வரும் போராட்டத்துக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் ஆதரவளித்துள்ளது. மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து பல மூத்த மருத்துவர்கள் ராஜிநாமா செய்துள்ளனர். அதனால் பல இடங்களில் மருத்துவச் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 75 சதவீத மருத்துவர்கள், ஏதோ ஒரு வகையில் தாக்குதலை எதிர்கொண்டுள்ளதாக மருத்துவர்கள் சங்க ஆய்வறிக்கை கூறுகிறது. பெரும்பாலும் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே இத்தகைய வன்முறைகள் நிகழ்கின்றன. மருத்துவர்கள் நம் அனைவரது உயிரையும் காப்பவர்கள். அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், தேசத்துக்கு சிறந்த சேவையை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், பாதுகாப்புப் பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கும், மேற்கு வங்க அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன் மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தார். அதையேற்ற நீதிபதிகள், இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரிப்பதாகத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

SCROLL FOR NEXT