இந்தியா

அயோத்தி பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை; ஒருவர் விடுதலை

DIN

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் கடந்த 2005ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கில்,  4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவரில் ஒருவரை மட்டும் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.
அயோத்தி பயங்கரவாதத் தாக்குதலில் 2 உள்ளூர்வாசிகளும், 7 சிஆர்பிஎஃப் வீரர்களும் உயிரிழந்தனர். 
அதேசமயம், பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 5 ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை, நைனி மத்திய சிறைச்சாலையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி தினேஷ் சந்திரா, இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். தண்டனை பெற்றவர்களுக்கு தலா ரூ.2.4 லட்சம் அபராதத்தையும் அவர் விதித்தார்.
இதுகுறித்து அரசு தரப்பு வழக்குரைஞர் குலாப் சந்திர அக்ரஹாரி, அலாகாபாதில் செய்தியாளர்களிடம்  செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இர்ஃபான், ஷகீல் அகமது, ஆஸிஃப் இக்பால், முகமது நஸீம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 
குற்றம்சாட்டப்பட்டவர்களில் முகமது அஜீஸ் மட்டும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டார்.
நஸீம் வைத்திருந்த சிம் கார்டு, அஜீஸின் ஆவணங்களைப் பயன்படுத்தி பெறப்பட்டது. காரி என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதியின் அறிவுறுத்தலின்பேரில் சிம் கார்டு வாங்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. ஜம்மு பதிவு எண்ணைக் கொண்ட வாகனத்தை, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பயன்படுத்தினர் என்றார் குலாப் சந்திர அக்ரஹாரி.
பின்னணி: அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பகுதி அருகே கடந்த 2005ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி 5 பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். முதல்கட்ட பாதுகாப்பு வளையத்தை வெடிகுண்டு மூலம் தகர்த்த பயங்கரவாதிகள், அடுத்தகட்ட பாதுகாப்பு வளையத்தை நோக்கி முன்னேறினர்.
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே பயங்கரவாதிகள் முன்னேறினர். பதிலடி தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கடந்த 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 371 அமர்வுகள் விசாரணை நடைபெற்றது. 63 சாட்சியங்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. 
குற்றவாளிகளில் இர்பான் மட்டும் உத்தரப் பிரதேச மாநிலம், சஹரன்பூரைச் சேர்ந்தவர். எஞ்சியுள்ள 4 பேர் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
யோகி வரவேற்பு:  அயோத்தி பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை வரவேற்பதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT