இந்தியா

குழந்தைகள் பலியான விவகாரம்:முசாஃபர்பூரில் முதல்வர் நிதீஷ் குமார் ஆய்வு

DIN


பிகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்டத்தில் மூளை அழற்சி நோய் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகி உள்ள நிலையில், அந்த மாவட்டத்தை முதல்வர் நிதீஷ் குமார் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
முசாஃபர்பூர் மாவட்டத்தில் மூளை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த 1-ஆம் தேதி முதல் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 105 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர். நாளுக்கு நாள் குழந்தைகள் பலியாகும் அவலம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை முதல் தில்லியில் முகாமிட்டிருந்த மாநில முதல்வர் நிதீஷ் குமார், திங்கள்கிழமை மாலை பிகாருக்குத் திரும்பினார். அதன் பிறகு, மூளை அழற்சி நோயின் தாக்கம் குறித்து ஆராய அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். 
கூட்டத்துக்குப் பிறகு, மூளை அழற்சி நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் சிகிச்சைக்கான செலவுகள் அனைத்தையும் மாநில அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், மாநிலத் தலைநகரிலுள்ள மருத்துவமனைக்குப் பயணம் மேற்கொள்ள பல மணி நேரம் ஆவதால், அதற்குள் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடல்நலம் மேலும் மோசமடைந்துவிடுகிறது. எனவே, மாநிலத்திலுள்ள முதன்மை சுகாதார மையங்கள் அனைத்திலும் மூளை அழற்சி நோய்க்கான சிகிச்சைகள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மாநிலத்தின் கடைக் கோடிப் பகுதியில் உள்ள மக்களும் பயன்பெற முடியும் என்றனர்.
இந்நிலையில், நோய் தாக்கம் காரணமாக 200க்கும் அதிகமான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ள முசாஃபர்பூர் மருத்துவமனையில் முதல்வர் நிதீஷ் குமார் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் நிலைமையை அவர் ஆய்வு செய்தார். அவருடன் துணை முதல்வர் சுஷீல் குமார் மோடி, மாநில அமைச்சர்கள், முசாஃபர்பூர் எம்எல்ஏ சுரேஷ் சர்மா உள்ளிட்டோரும் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து, முதல்வர் நிதீஷ் குமார் மருத்துவர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். முதல்வரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மருத்துவமனைக்கு வெளியே சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தபிறகு, மருத்துவமனையை முதல்வர் நிதீஷ் குமார் ஆய்வு செய்வதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காங்கிரஸ் குற்றச்சாட்டு: குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்துக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தனே பொறுப்பு என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக, அக்கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், கடந்த 2014-ஆம் ஆண்டு 139 குழந்தைகள் பலியாகினர்; 2019-ஆம் ஆண்டு இதுவரை 105 குழந்தைகள் பலியாகி உள்ளனர். 
கடந்த 2014-ஆம் ஆண்டும் ஹர்ஷ் வர்த்தன்தான் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார். இப்போதும் அவர்தான் இருக்கிறார். வெறும் வாக்குறுதிகளை மட்டுமே அவர் அளித்து வருகிறார். ஆனால், நடைமுறையில் எதுவும் நடக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT