இந்தியா

மாநிலங்களவை இடைத்தேர்தல் விவகாரம்: காங்கிரஸ் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

DIN


குஜராத்தில் 2 மாநிலங்களவை இடங்களுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மாநில காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்த மனு புதன்கிழமை விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
மக்களவை எம்.பி.க்களாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் குஜராத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்துவந்தார்கள். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.க்கள் ஆனதைத் தொடர்ந்து, அந்த இடங்கள் காலியானது.
குஜராத்தில் காலியான இந்த மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 5ஆம் தேதி தனித்தனியாக இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனித்தனியாக தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏ பரேஷ்பாய் தனானி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை புதன்கிழமை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷாவும், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஸ்மிருதி இரானியும் பதவி வகித்து வருகின்றனர்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் ஒரே மாநிலத்தில் 2 மாநிலங்களவை இடங்களுக்குத் தனித்தனியாக தேர்தல் நடத்தலாம் என்று தில்லி உயர்நீதிமன்றம் கடந்த 1999 மற்றும் 2009  ஆகிய ஆண்டுகளில் வெளியிட்ட தீர்ப்புகளில் குறிப்பிட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT