அமேதி: சமீப காலங்களில் தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்த போது, சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிய 'கோ பேக் மோடி' கோஷம் தற்போது உத்தரப்பிரதேசத்தையும் எட்டியுள்ளது.
சமீப காலங்களில் அரசுத் திட்ட துவக்க விழாக்களுக்காக தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்த சமயங்களில் எல்லாம், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சமூக வலைத்தளங்களில் பயனாளர்கள் மத்தியில் 'கோ பேக் மோடி' என்னும் கோஷம் வைரலாகப் பரவியது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சொந்தத் தொகுதியான அமேதிக்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிறன்று செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில், ரஷ்யாவுடன் சேர்ந்து ரைபிள் துப்பாக்கிகள் தயாரிக்கும் துப்பாக்கித் தயாரிப்பு ஆலை ஒன்றுக்கு அவர் அடிக்கல் நாட்ட உள்ளார்.
கவுரிகஞ்ச் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் மோடி பங்கேற்க உள்ளார். மேலும், தொகுதி மக்களுக்கு என பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.
இந்நிலையில் 'கோ பேக் மோடி' என்னும் கோஷமானது தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியையும் எட்டியுள்ளது.
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமேதி தொகுதி உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள இடங்களில் பாதாகைகள், போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இவற்றில், ''5 ஆண்டுகள் உங்கள் ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகள் என்ன? என்றும், கோ பேக் மோடி'' என்றும் இந்தியில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
இந்தப் பாதாகைகளையும், சுவரொட்டிகளையும் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஜெய்சிங் பிரதாப் யாதவ் என்பவர் ஒட்டியுள்ளார்.
ஆட்சிக்கு வந்த பிறகு, அமேதி மக்களவைத் தொகுதிக்கு பிரதமர் மோடி செல்வது இதுவே முதல் முறையாகும். மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது அமேதிக்கு வந்த மோடி அதன் பின் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.