இந்தியா

வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு: பிரபலங்களுக்கு மோடி வேண்டுகோள்

DIN


வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அரசியல், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பிரபலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கும் மக்களவைத் தேர்தல் பல கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர்களிடத்தில் தெரியப்படுத்துங்கள் என்று பிரபலங்களிடத்தில் மோடி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சுட்டுரையில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:

வரும் மக்களவைத் தேர்தலில், அதிக அளவிலான மக்கள் வாக்களிக்கும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்துங்கள். அதிக அளவிலான மக்கள் வாக்களித்தால், அது வலிமையான ஜனநாயக அரசை உருவாக்கும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி சுட்டுரை வழியாக வேண்டுகோள் விடுத்தார்.
திரைத்துறை: திரைத்துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து விருதுகளை பெறும் நீங்கள், வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். மக்களின் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு வாக்களிப்பதுதான் சரியான வழி என்பதை மக்களிடத்தில் தெரியப்படுத்துங்கள் என்று மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா, ஹிந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாரூக் கான், அமீர் கான், கரண் ஜோஹர், நடிகைகள் தீபிகா படுகோன், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதனிடையே, தொழிலதிபர்கள் ரத்தன் டாடா மற்றும் விளையாட்டு துறையைச் சேர்ந்தவர்களான பி.வி. சிந்து, சானியா மிர்சா உள்ளிட்டோரிடமும் வாக்களிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாக்களிப்பது தலையாய கடமை: பிரதமர் மோடி
தேர்தலில் வாக்களிப்பது மக்களின் தலையாய கடமை என்று கூறிய பிரதமர் மோடி, இதுதொடர்பாக புதன்கிழமை சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், நாட்டின் வளர்ச்சியில் மக்கள் பங்களிக்க விரும்புகிறார்கள் என்பதை அறிய வைப்பது வாக்குரிமை. வாக்களிப்பதன் மூலமாக, நாட்டின் கனவுகளிலும், வளர்ச்சியிலும் மக்கள் தங்களை இணைத்துக் கொள்ளலாம். 
உங்களுக்கு பிடிக்காத ஒரு செயல் நாட்டில் நடைபெறும்போது, நாம் தேர்தலில் வாக்களித்திருந்தால், தற்போது இந்த தவறான செயல் நாட்டில் நடைபெற்றிருக்காது என்ற எண்ணம் வரும். அத்தகைய சூழலை எதிர்கொள்ள விரும்புகிறீர்களா? வரும் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்க இருப்பவர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயரை இணைத்திருப்பார்கள் என்று நம்புகிறேன். வாக்களிப்பது நம் தலையாய கடமை என்பதை ஒவ்வொரு வாக்காளரும் உணர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயரை சேர்ப்பதற்கான இணையதள தகவல்களையும் அவர் பதிவிட்டிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT