புது தில்லி: பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார்.
பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் தொடர்ந்து ஆர்வத்துடன் செயல்பட்டு வரும் அரசியல் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர். ட்விட்டரில் அதிகப் பேரால் பின்பற்றப்படும் அரசியல் தலைவர்களில் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் அவர் உள்ளார்.
இந்நிலையில் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார்.
இதுவரை நரேந்திர மோடி என்ற பெயரில் செயல்பட்டு வந்த அவரது கணக்கின் பெயரை தற்போது, 'சவ்கிதார் நரேந்திர மோடி' என்று மாற்றிக் கொண்டுள்ளார்.
சவ்கிதார் என்ற ஹிந்திச் சொல்லுக்கு பாதுகாவலர் என்று பொருளாகும். தான் நாட்டின் பாதுகாலராக இருக்கிறேன் என்று பிரதமர் மோடி முன்பு ஒருமுறை கூறியிருந்தார். அதனையடுத்து ரஃபேல் ஊழல் விவகாரம் தொடர்பாக அவரை விமர்சித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் பாதுகாவலரே திருடராக மாறி விட்டார் என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
தொடர்ந்து காங்கிரசின் இந்த பிரசாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க முடிவு செய்த பாஜக, தற்போது 'நானும் பாதுகாவலர் (மைன்பி சவ்கிதார்)' என்ற பரப்புரையை துவக்கியுள்ளது.
இதுதொடர்பாக சனிக்கிழமையன்று மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தாவது:
உங்களது பாதுகாவலர் உறுதியாக நாட்டைக் காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் நான் தனியாக இல்லை. நாட்டில் உள்ள ஊழல், சமூகத் தீமைகளுக்கு எதிராகப் போராடும் எல்லோரும் பாதுகாவலர்கள். நாட்டின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைக்கும் எல்லோரும் பாதுகாவலர்கள். இன்று ஒவ்வொரு இந்தியனும் 'நானும் பாதுகாவலர்' என்று கூறுகிறான்.
இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக தற்போது ட்விட்டரில் அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார். மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் தங்கள் பெயரை மாற்றிக் கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.