இந்தியா

லோக் ஆயுக்த உறுப்பினர்கள் நியமன விவகாரம்: தமிழக அரசு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

DIN

லோக் ஆயுக்த உறுப்பினர்கள் நியமனத்துக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. 
கரூரை சேர்ந்த ஆர். ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் டிஎன்பிஎஸ்சி-யின் முன்னாள் தலைவராக இருந்து உயர்நீதிமன்றத்தால் தகுதி இழப்பு செய்யப்பட்ட எம். ராஜாராம் மற்றும் அதிமுகவின் வழக்குரைஞர் பிரிவுச் செயலர் கே.ஆறுமுகம் ஆகியோரை லோக் ஆயுக்த அமைப்பின் உறுப்பினர்களாகத் தேர்வு செய்துள்ளனர்.  இது லோக் ஆயுக்த சட்டத்துக்கு எதிரானது. அரசியல் தொடர்புடைய ஒருவரும், நீதிமன்றத்தால் தகுதி இழப்பு செய்யப்பட்ட ஒருவரும் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டது விதிகளுக்கு எதிரானது. எனவே, அவர்களை உறுப்பினர்களாக நியமித்து வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்வதோடு, அது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், விதிப்படி உரிய தகுதியுடைய உறுப்பினர்களைத் தேர்வு செய்யவும் உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. 
இந்த வழக்கை ஏப்ரல் 5-ஆம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, எம். ராஜாராம், கே. ஆறுமுகம் ஆகியோரின் நியமனத்தில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி இருவரின் நியமனத்திற்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. 
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 15-இல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனு உச்சநீதிமன்றத்தில்
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஏப்ரல் 29-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.  
அப்போது, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்றும், விசாரணை மே 8-ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். 
இந்நிலையில், இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி இந்த வழக்கில் என்ன அவசரம் உள்ளது? என வினவினார். அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல்
தலைமை வழக்குரைஞர், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி லோக்ஆயுக்த அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், உறுப்பினர்களின் நியமனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், செயல்படாத நிலை உள்ளது என்றார்.
ஆர். ராஜேந்திரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்,  ஏ. சிராஜுதின், சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்றார். கே. ஆறுமுகம் சார்பில் மூத்த வழக்குரைஞர் நாகமுத்துவும், ராஜாராம் சார்பில் மூத்த வழக்குரைஞர் நந்தகுமாரும் ஆஜராகினர்.  
வாதங்களைப் பதிவு நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT