இந்தியா

கருப்புப் பணத் தடுப்புச் சட்ட விவகாரம்: தில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை

DIN


கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தை முன்தேதியிட்டு நடைமுறைக்குக் கொண்டுவந்த மத்திய அரசின் நடவடிக்கையை அனுமதிக்க முடியாது என்ற தில்லி உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துகள், வெளிநாட்டிலிருந்து பெறும் வருமானம் ஆகிய தகவல்களை வெளியிடாதது தொடர்பான கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தைக் கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அரசு நிறைவேற்றியது. அவ்வாறு வெளியிடப்படாத சொத்துகளுக்கு வரி விதிக்கவும் இந்தச் சட்டம் வழிவகுக்கிறது. இந்நிலையில், இந்தச் சட்டம் முன்தேதியிடப்பட்டு 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்தது. 
இச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்குரைஞர் கெளதம் கேதானின் சொத்துகள் முடக்கப்பட்டன. இதை எதிர்த்தும், தன் மீது குற்றவியல் வழக்குப் பதிய அனுமதி அளித்து, வருமான வரித்துறையினர் கடந்த ஜனவரி மாதம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும் தில்லி உயர்நீதிமன்றத்தில் கேதான் மனு தாக்கல் செய்தார். 
இடைக்காலத் தடை: இந்த மனு மீது விசாரணை நடத்திய தில்லி உயர்நீதிமன்றம், 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து கருப்புப் பணத் தடுப்புச் சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக நாடாளுமன்றத்தில் முடிவெடுக்கப்பட்டது. பின்னர், இச்சட்டம் 2015-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருவதாக அறிவிப்பாணை மூலம் மத்திய அரசு தெரிவித்தது. இதுபோன்று அறிவிப்பாணை வெளியிடுவதன் மூலம், குறிப்பிட்ட சட்டத்தை முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்த முடியாது. எனவே, மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது எனக் கடந்த 16-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
மேல்முறையீடு: தில்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான விடுமுறைக்கால அமர்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க ஒப்புக்கொண்ட நீதிபதிகள், கருப்புப் பணத் தடுப்புச் சட்டம் தொடர்பான தில்லி உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்குத் தடை விதித்தனர். இந்த விவகாரத்தில், மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக 6 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு வழக்குரைஞர் கெளதம் கேதானுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பான தில்லி உயர்நீதிமன்றத்தின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ சங்கரா பகவதி கல்லூரி ஆண்டு விழா

பொத்தகாலன்விளையில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருச்செந்தூரில் மௌன சுவாமி குருபூஜை

பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

குவாரி உரிமையாளரிடம் ரூ.16 லட்சம் மோசடி: கேரள இளைஞா் கைது

SCROLL FOR NEXT