இந்தியா

தனியார்மய நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்: அரவிந்த் பனகாரியா

DIN


இந்தியாவில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு அடுத்து வரும் புதிய அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பிரபல பொருளாதார வல்லுநரான அரவிந்த் பனகாரியா தெரிவித்துள்ளார்.
மே 23-இல் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், மத்தியில்  பொறுப்பேற்கவிருக்கும் புதிய அரசு எந்த வகையான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கேள்விக்கு பனகாரியா பிடிஐ செய்தியாளரிடம் தெரிவித்துள்ளதாவது: 
அடுத்து பொறுப்பேற்க இருக்கும் புதிய அரசு, நிதி சார்ந்த சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவது மிக அத்தியாவசியமான செயலாகும். அதுமட்டுமின்றி பல்வேறு மத்திய அமைச்சகங்களை ஒருங்கிணைப்பதோடு தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளையும் புதிய அரசு மேற்கொள்ள வேண்டும்.
நிதி சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு வலுவான முன்னுரிமை கொடுப்பது தனியார் துறை முதலீட்டிற்கான நிதியில் பற்றாக்குறை இல்லை என்பதை உறுதிப்படுத்த உதவும். 
இதைத்தவிர, தற்போதுள்ள 50-க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சகங்களின் எண்ணிக்கையை 30-ஆக குறைக்க வேண்டும். நிர்வாக திறனை மேம்படுத்த சர்வதேச தர நிலைகளை பின்பற்றி இந்தியாவில் அமையவுள்ள புதிய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். 
பெரும்பாலான உலக நாடுகள் சிறப்பான நிர்வாகத்தை கொடுக்க இதே வழிமுறையைத்தான் பின்பற்றி வருகின்றன.
அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை புதிய அரசு துரிதப்படுத்த வேண்டும். வாரத்துக்கு ஒரு பொதுத் துறை நிறுவனத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் இது சாத்தியமானதே. ஏனெனில், 24-க்கும் அதிகமான பொதுத் துறை நிறுவனங்கள் தனியார் மயமாவதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் வேண்டி ஏற்கெனவே காத்திருப்பில் உள்ளன. குறிப்பாக,  ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்க வேண்டும்.
இந்தியாவில் அமையவிருக்கும் புதிய அரசு பொருளாதார வளர்ச்சியை துரித கதியில் ஊக்குவிக்க,  உலக நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கென ஒரு புதிய நிறுவனத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.
அரவிந்த் பனகாரியா கடந்த 2015 முதல் 2017 காலகட்டத்தில் நீதி ஆயோக்கின் முதல் துணைத் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கதேச எம்.பி. கொலை: கொல்கத்தா குடியிருப்பிலிருந்து பெரிய பையுடன் வெளியேறிய இருவர்?

புஷ்பா - 2 இரண்டாவது பாடல்!

ஹரியாணாவின் 10 தொகுதிகள்: காற்று வீசுவது யார் பக்கம்?

ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

வாரணாசியில் பிரியங்கா காந்தி ‘ரோடுஷோ’!

SCROLL FOR NEXT