இந்தியா

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு: சூஸன் குப்தா ஜாமீன் மனு மீது ஜூன் 1ஆம் தேதி தீர்ப்பு

DIN


அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில், கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சூஸன் குப்தாவின் ஜாமீன் மனு மீது வரும் 1ஆம் தேதி தில்லி நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.
இவ்வழக்கை விசாரித்துவரும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், அமலாக்கத்துறை மற்றும் மனுதாரரின் தரப்பின் வாதத்தை பதிவு செய்தார். தீர்ப்பை 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
சூஸன் குப்தா விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். தேவைப்படும்போது அவரை ஆஜர்படுத்துவோம். அவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று மூத்த வழக்குரைஞர் சித்தார்த்த லுத்ரா வாதத்தை முன்வைத்தார்.
விசாரணை தொடக்க நிலையில் இருப்பதால் அவருக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது என்று அமலாக்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள சூஸன் குப்தாவுக்கு எதிராக கடந்த 22ஆம் தேதி கூடுதல் குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறை தாக்கல் செய்தது. 
முக்கியப் பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர வழக்கில், துபையைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜீவ் சக்ஸேனாவிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் தில்லியைச் சேர்ந்த இடைத்தரகர் சூஸன் குப்தா கடந்த மாதம் 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதையடுத்து அமலாக்கத் துறை விசாரணைக்காக அவர் காவலில் வைக்கப்பட்டிருந்தார். 
இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்ய 12 அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்க ரூ.3, 600 கோடி மதிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டில் அப்போதைய மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.423 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
இந்த வழக்கில் விமானப்படை முன்னாள் தலைமை தளபதி எஸ்.பி. தியாகி, இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெல், அகஸ்டா வெஸ்ட்லேண்ட், ஃபின்மெக்கானிகா நிறுவனங்களின் முன்னாள் இயக்குநர்கள், துபையைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜீவ் சக்ஸேனாவின் மனைவி ஷிவானி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்த முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT