இந்தியா

மக்களவைத் தேர்தல் முடிவுகள்: மஜத-காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை

DIN

மக்களவைத் தேர்தல் முடிவுகளால் எழுந்துள்ள அசாதாரண அரசியல் சூழ்நிலையில், கர்நாடகத்தில் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் மஜத-காங்கிரஸ் கூட்டணித் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
கர்நாடகத்தில் 28 மக்களவைத் தொகுதிகளில் 25 இடங்களை பாஜகவும், ஆளும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மஜத தலா ஓரிடத்திலும் வெற்றி பெற்றன. இந்த நிலையில், மஜத, காங்கிரஸ் கட்சிகளில் அதிருப்தி அடைந்துள்ள எம்எல்ஏக்களை பாஜகவுக்கு இழுத்து, அவர்களின் உதவியுடன் கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றலாம் என பாஜக திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. மே 30-ஆம் தேதி பிரதமராக மீண்டும் மோடி பதவியேற்றுக் கொண்டதும், ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகள் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இதனால் கலக்கமடைந்துள்ள காங்கிரஸ், மஜத தலைவர்கள் பாஜகவின் முயற்சியை முறியடிக்க கடந்த சில நாட்களாகவே தொடர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் குமாரசாமி, தனது தலைமையிலான கூட்டணி அரசைக் காப்பாற்ற காங்கிரஸில் அதிருப்தி அடைந்துள்ள மகேஷ் குமட்டஹள்ளி உள்ளிட்டோரை நேரில் சந்தித்து சமாதானம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். 
காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ ரமேஷ் ஜார்கிஹோளிக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுப்பது தொடர்பாகவும் யோசிக்கப்பட்டு வருகிறது. ரமேஷ் ஜார்கிஹோளி, கே.சுதாகர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணாவை அண்மையில் சந்தித்தது கூட்டணி கட்சிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 
இதுபோன்ற அசாதாரண அரசியல் சூழ்நிலைகள் நிலவும் நிலையில்,  கூட்டணி ஆட்சியைகக் பாதுகாப்பதற்காக காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளரும், கர்நாடக மேலிடப் பொறுப்பாளருமான கே.சி.வேணுகோபால் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பெங்களூரு வந்தார்.
பெங்களூரு, குமாரகுருபாவில் முதல்வர் குமாரசாமி, துணைமுதல்வர் ஜி.பரமேஸ்வர், முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ், அமைச்சர்கள் டி.கே.சிவக்குமார், எம்.பி.பாட்டீல் உள்ளிட்ட மஜத-காங்கிரஸ் கூட்டணி தலைவர்களுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.
மக்களவைத் தேர்தலுக்கான தோல்வி, அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள்,  கூட்டணி ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள அமைச்சரவையில் காலியாக இருக்கும் 3 இடங்களை நிரப்புவதா? அமைச்சரவையை மாற்றியமைப்பதா?  ஒருசிலரை அமைச்சரவையில் இருந்து கைவிட்டுவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதா? என்பது குறித்து ஆராயப்பட்டது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கவில்லை என்று சித்தராமையா தெரிவித்தார்.
இக் கூட்டத்தின் முடிவில் தினேஷ் குண்டுராவ் கூறியது:  மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  அடுத்தகட்டமாக கட்சியின் நடவடிக்கைகள் குறித்தும் அலசப்பட்டது.  கூட்டணி அரசு பாதுகாப்பாக உள்ளது.  இந்த அரசு நிலையாக இருக்கும். கூட்டணிக் கட்சிகள் ஒன்றாக இருக்கின்றன. அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும் எதுவும் சொல்வதற்கில்லை என்றார்.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குழு கூட்டம் அதன் தலைவர் சித்தராமையா தலைமையில் புதன்கிழமை நடந்தது.  இக் கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ், துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.  இக் கூட்டத்தில் கூட்டணி அரசைக் காப்பாற்றிக் கொள்வதற்கான அரசியல் சூழல், மக்களவைத் தேர்தல் தோல்வி, அமைச்சரவை விரிவாக்கம் அல்லது மாற்றியமைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT