இந்தியா

தில்லி வழக்குரைஞர்களின் போராட்டம் வாபஸ்: 11 நாள்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது

DIN


தீஸ் ஹஸாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் போலீஸாரால் தாக்கப்பட்டதற்கு  எதிர்ப்புத் தெரிவித்து தில்லயில் உள்ள ஆறு மாவட்ட நீதிமன்றங்களிலும் உள்ள வழக்கறிஞர்கள் கடந்த 11-நாள்களாக நடத்தி வந்த பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை திரும்பப் பெற்றனர். சனிக்கிழமை முதல் அவர்கள் பணிக்குத் திரும்புவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தில்லியில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களின் பார் அசோசியேஷன்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் மஹாவீர் சர்மா கூறுகையில், "வழக்குரைஞர்களின் பணிப் புறக்கணிப்பு போராட்டம் தொடரக் கூடாது என தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவையேற்று, போராட்டத்தை தற்போதைக்கு வாபஸ் பெறுவதாக எங்கள் குழுவின் உறுப்பினர்கள் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். எனினும், எங்கள் போராட்டங்கள் வேறு வகையில் தொடரும். வழக்குரைஞர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும் என்றார்.
இதனிடையே "அனைத்து மாவட்ட நீதிமன்றங்களின் வழக்குரைஞர்களும் நவம்பர் 20-ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கு வெளியே தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள்' என்று ஒருங்கிணைப்புக் குழுவின் பொதுச் செயலாளர் தீர் சிங் கசனா தெரிவித்தார்.
மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞர்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் காரணமாக, பிகார் மாநிலம், முசாஃபர்பூரில் உள்ள காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பான வழக்கின் தீர்ப்பு உள்பட பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும், வழக்குரைஞர்கள் மற்றும் ஆலோசகர்கள் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் முக்கியமான வழக்குகளின் விசாரணையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் துணை நிலைஆளுநர் அனில் பய்ஜால் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்து மாவட்ட நீதிமன்ற சங்கங்களின் உறுப்பினர்கள், தில்லி காவல்துறை பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்ற சமரசக் கூட்டத்தில் பிரச்னைக்கு எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. 
தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக போலீஸாருக்கும், வழக்குரைஞர்களுக்கும் கடந்த 2ஆம் தேதி ஏற்பட்ட மோதலில் 20 போலீஸாரும், வழக்குரைஞர்கள் சிலரும் காயமடைந்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நவம்பர் 4 முதல் ஆறு மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள வழக்குரைஞர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சக போலீஸாரை வழக்குரைஞர்கள் தாக்கியதற்குக் கண்டனம் தெரிவித்து காவல் துறை தலைமையகத்திற்கு வெளியே போலீஸார் நவம்பர் 5-ஆம் தேதி 11 மணி நேரம் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

கைது நடவடிக்கையிலிருந்து 2 எஸ்ஐக்களுக்குப் பாதுகாப்பு
வழக்குரைஞர்களுக்கும் போலீஸாருக்கும் இடையிலான மோதல் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகளை கைது செய்யாமல் இருக்கும் வகையில், தில்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலப் பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக காவல் துறை உதவி ஆய்வாளர்கள் காந்தா பிரசாத், பவன் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இடைநீக்கமும் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், இந்த விவாகரத்தில் நீதி விசாரணை முடியும் வரை கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி டி.என். படேல், நீதிபதி சி.ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசு, தில்லி காவல்துறை, இந்திய பார் கவுன்சில் உள்பட பல்வேறு பார் அசோசியேஷன்கள் ஆகியவற்றின் பதில்களைக் கோரியிருந்தது. 
இந்நிலையில், இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த போது, "இந்த மோதல் சம்பவம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர்கள் காந்தா பிரசாத், பவன் குமார் ஆகியோரை அடுத்த விசாரணை நடைபெறும் டிசம்பர் 23-ஆம் தேதி வரை கைது செய்யக் கூடாது' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT