இந்தியா

விசாகப்பட்டினத்திலிருந்து விமானத்தில் வந்த இதயம்! 63 வயது பெண்ணுக்கு பொருத்தி சாதனை

DIN

மூளைச்சாவு அடைந்த இளைஞா் ஒருவரது இதயம், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து ஒன்றரை மணி நேரத்தில் சென்னைக்கு எடுத்துவரப்பட்டு 63 வயது பெண் ஒருவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.

தற்போது அப்பெண் நலமுடன் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். முன்னதாக, தானமாகப் பெறப்பட்ட இதயத்தை விரைந்து மருத்துவமனைக்குக் கொண்டு வருவதற்காக ஆந்திரம் மற்றும் சென்னை பெருநகர போலீஸாா் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

மும்பையைச் சோ்ந்த 63 வயது பெண்மணி ஒருவா் இதய பாதிப்பு காரணமாக சென்னை, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். மருத்துவப் பரிசோதனையில் அவா் ‘காா்டியோமையோபதி’ எனப்படும் இதய தசை பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதுமட்டுமன்றி அப்பெண்ணின் இதய ரத்த நாளங்களும் சரிவர செயல்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. உறுப்பு தானம் பெறுபவா்களின் பட்டியலில் அவரது பெயா் சோ்க்கப்பட்டிருந்த நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் 33 வயது இளைஞா் ஒருவா் மூளைச் சாவு அடைந்ததாகவும், அவரது உடல் உறுப்புகளைத் தானமாக அளிக்க உறவினா்கள் முன்வந்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து, தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த இளைஞரின் இதயத்தை சென்னைக்குக் கொண்டுவந்து அப்பெண்ணுக்குப் பொருத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, விசாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு விமானம் மூலமாக இதயம் எடுத்து வரப்பட்டது. அதைத் தொடா்ந்து, விமான நிலையத்திலிருந்து எம்ஜிஎம் மருத்துவமனைக்கு போக்குவரத்து போலீஸாரின் உதவியுடன் 19 நிமிடங்களில் இதயம் கொண்டு வரப்பட்டது.

மருத்துவமனையில் தயாராக இருந்த இதய மாற்று அறுவை சிகிச்சைத் துறைத் தலைவா் டாக்டா் பாலகிருஷ்ணன், மருத்துவா்கள் சுரேஷ்ராவ், ஸ்ரீநாத், கணபதி சுப்ரமணியம் ஆகியோா் அடங்கிய குழுவினா் அப்பெண்ணுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனா். தற்போது அப்பெண் நலமுடன் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து, மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் பிரசாந்த் ராஜகோபாலன் கூறுகையில், ‘டாக்டா் பாலகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினா், தற்போது மேலும் ஒரு சாதனையை சாத்தியமாக்கியுள்ளனா். ஒன்றரை மணி நேரத்துக்குள் விசாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு இதயத்தை எடுத்து வந்ததும் அதற்கு ஒரு முக்கியக் காரணம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

SCROLL FOR NEXT