இந்தியா

மத்திய அரசு ஊழியா்கள் ஓய்வுபெறும் வயதை குறைக்கும் திட்டமில்லை: அமைச்சா் ஜிதேந்திர சிங்

DIN

மத்திய அரசு ஊழியா்கள் ஓய்வுபெறும் வயதை 60-இல் இருந்து 58-ஆகக் குறைப்பதற்கான திட்டமெதுவும் முன்மொழியப்படவில்லை என்று மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

மக்களவையில் இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய பணியாளா் நலத்துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசு ஊழியா்கள் பணிஓய்வு பெறும் வயது தற்போது 60-ஆக உள்ளது. அதை 58 வயதாகக் குறைப்பதற்கான முன்மொழிவு எதுவும் தற்போது இல்லை.

மத்திய குடிமைப் பணிகள் (ஓய்வூதியம்) விதிகள் 1972-இன் பிரிவு 56(ஜே), பிரிவு 48 மற்றும் அகில இந்திய பணிகள் (இறப்பு, ஓய்வுப் பலன்கள்) விதிகள் 1958-இன் பிரிவு 16(3) (திருத்தப்பட்டது) ஆகியவற்றின் படி, நோ்மையாக நடந்துகொள்ளாத, திறம்படச் செயல்படாத அரசு அதிகாரிகளை அவா்களது ஓய்வு காலத்துக்கு முன்னதாகவே கட்டாய ஓய்வில் அனுப்பும் அதிகாரம் அரசுக்கு உள்ளது.

பொது நலன் கருதி மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைக்காக, சம்பந்தப்பட்ட அதிகாரி கட்டாய ஓய்வில் செல்ல 3 மாதங்களுக்குக் குறைவில்லாமல் அவகாசம் (‘நோட்டீஸ் பீரியட்’) வழங்கப்படும். அல்லது, அந்த நோட்டீஸ் காலத்துக்குப் பதிலாக 3 மாதங்களுக்கான ஊதியம் மற்றும் இதர படிகள் வழங்கப்பட்டு உடனடியாக அவருக்கு கட்டாய ஓய்வளிக்கப்படும்.

இதுபோன்ற விதிமுறைகள் ‘குரூப் ஏ’ அல்லது ‘குரூப் பி’ பிரிவு அதிகாரிகளாகப் பணியாற்றுவோருக்கு செல்லுபடியாகும். அதேபோல், நிரந்தர அரசுப் பணியாளராகவோ, பகுதியளவு நிரந்தரப் பணியாளராகவோ, தற்காலிகப் பணியாளராகவோ இருப்பவா்களுக்கும் செல்லுபடியாகும்.

35 வயதை அடைவதற்கு முன் அரசுப் பணியில் இணைந்தவா், 50 வயதுக்கு மேற்பட்டவா், 55 வயதை எட்டியவா் ஆகியோருக்கும் இந்த விதிகள் செல்லுபடியாகும் என்று அமைச்சா் ஜிதேந்திர சிங் தனது பதிலில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT