இந்தியா

டென்மார்க் உச்சி மாநாட்டில் கேஜரிவால் பங்கேற்க மத்திய அரசு அனுமதி மறுப்பு

DIN


காலநிலை மாற்றம் தொடர்பாக டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெறும் சி-40 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது. இதனால், அவர் அந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் சி-40 உச்சி மாநாடு புதன்கிழமை (அக்டோபர் 9) தொடங்கி 12- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் அதில் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவருடன் 8 பேர் அடங்கிய குழுவும் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த மாநாட்டில் தில்லியில் காற்று மாசுவைக் குறைக்க தில்லி அரசால் மேற்கொள்ளப்பட்ட வாகனக் கட்டுப்பாடு திட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பாக கேஜரிவால் உரையாற்றுவார் என்று தில்லி அரசு தெரிவித்திருந்தது.
 இந்நிலையில், வெளிநாடுகளில் நடைபெறும் கருத்தரங்குகளில் இந்தியத் தலைவர்கள் கலந்து கொள்வதாக இருந்தால், அவர்கள் மத்திய வெளிவிவகாரத் துறையிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டியது அவசியமாகும். 
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் கேஜரிவாலுக்கு தடையில்லாச் சான்றிதழை மத்திய அரசு வழங்கவில்லை. இதன்மூலம், அந்த மாநாட்டில் அவரால் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பாக தில்லி அரசு வட்டாரங்கள் கூறுகையில், சி-40 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணிக்கு விமானத்தில் டென்மார்க், கோபன்ஹெகன் செல்வதற்கு கேஜரிவால் திட்டமிட்டிருந்தார். ஆனால், வெளியுறவுத் துறை தடையில்லாச் சான்றிதழை வழங்காததால், அவரால் அங்கு செல்ல முடியவில்லை என்றனர்.
ஆம் ஆத்மி கட்சி கண்டனம்: 
இதற்கிடையே, மத்திய அரசின் முடிவுக்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் கூறியதாவது:  தில்லி அரசின் நடவடிக்கைகளால் தலைநகரில் 25 சதவீதம் காற்றுமாசு குறைந்துள்ளது. டென்மார்க் நாட்டுக்கு விடுமுறையைக் கழிக்க கேஜரிவால் செல்ல முயற்சிக்கவில்லை. மாறாக, உலகம் முழுவதும் நிலவும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்துவது தொடர்பான முக்கியமானதொரு மாநாட்டில் கலந்து கொள்ளவே அவர் செல்லவிருந்தார். கேஜரிவாலுக்கு அனுமதி மறுத்துள்ள மத்திய அரசின் இந்த முடிவால், உலகளவில் இந்தியாவின் நன்மரியாதைக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது. தில்லி அரசு மீது மத்திய அரசு இவ்வளவு கோபத்தை வெளிப்படுத்துவது ஏன்? இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மேற்கு வங்கத்தின் நகர மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிர்கத் ஹக்கீமுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அவர் 1 வாரத்துக்கு முன்புதான் விண்ணப்பித்திருந்தார். ஆனால், கேஜரிவால் சுமார் 1 மாதம் முன்பே விண்ணப்பித்திருந்தார். ஏன் இந்தப் பாகுபாடு என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

துளிகள்...

SCROLL FOR NEXT